415
 

5. சத்திபேதம் - திரிபுரை சக்கரம்

1021 .மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.1

(ப. இ.) காரிய உலகு உடல் பொருள்களுக்குக் காரணமாகிய மாமாயையும், அக் காரியமாயையும், ஒளியாகிய வைந்தவமும், செவி ஓசையும், ஓமொழியும், அதன் உள் ஒளியாகிய எழுத்துக்களும், செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்னும் அறுபகைக்கு உடனாகும் ஆறுகோடி மாயையின் ஆற்றல்களும் தாமே இயங்கும் தன்மையவல்ல. மந்திர உருவாகிய திருவருளாற்றல் இவற்றை இயைந்தியக்குகின்றது. அதனால் அவை இயக்க இயங்கும் பொருளாகும். அவ்வாற்றலே திரிபுரை என்று வழங்கப்படும். அவ்வாறு இயைந்தியக்கினும் அவ்வாற்றல் பொருள் தன்மையால் வேறாகும். ஆறுகோடி வகையாயுள்ள மந்திரங்களென்றலும் ஒன்று. சத்திதன் மூர்த்திகளாம் என்பதற்குச் சத்தியின் எழுத்துருவங்கள் என்றலும் ஒன்று.

(அ. சி.) வயிந்தவம் - விந்து. ஓ மாயை - பிரணவம். ஆறுகோடியிற்றாமான மந்திரம் - ஆறு ஆதார மந்திர எழுத்து.

(1)

1022 .திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே.

(ப. இ.) மூன்று பிரிவுகளாயுள்ள வட்டத்துக்குரியவள் திரிபுரை என்பர். அழகருளும் அழகினள்; உள்வெளியாயுள்ள அந்தரி; செந்நிறமுள்ள அனைத்துலகுங்காக்கும் பரிபுரை; ஆருயிரைக் காக்கும் நாரணி, பால் போலும் தூய வெண்ணிறத்தள்; இருள் போலும் கருநிறத்தள்; ஆருயிர் மனத்து உன்னித்து நின்றருளும் பெருமை வாய்ந்த மனோன்மனி; இத்தகைய சிறப்புடன் இன்னும் பலவாய் நிற்கும் முழுமுதற்றலைவி அம்மையேயாகும். மாமாது - முழுமுதற்றலைவி. இதன்கண் வரும் ஒன்பது திருப்பெயரும் ஒருபுடை யொப்பாக ஒன்பான் ஆற்றல்களையும் குறிப்பனவாகும்.

(அ. சி.) திரிபுரைசுந்தரி - மும்மலம் நீங்க அருள்செயும் சத்தி. இருள்புரை ஈசி - கரியநிறமுள்ள சத்தி.

(2)

1023 .தானா அமைந்தவம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு வோருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.2


1. மாயைமா. சிவப்பிரகாசம், 7 - 2.

2. பொன்னு. ஆரூரார், 7. 59 - 1.