(ப. இ.) பல்லுயிர்க்கும் வினைக்கீடாகப் பல உடம்புகளைப் படைத்துக்கொடுத்தருளி அவ்வுடம்புதொறும் தானும் விரவிநிற்றற் பொருட்டுப் பலவாய் நிற்கவல்ல நந்தி, அவ்வுயிர்கட்குக் காட்சி அளித்தற் பொருட்டு வெளிப்பட்டும் நின்றருளினன். அதன் உண்மையினை ஆராய்ந்து அறியின் வளையணிந்த கையினையும் பொன்னணிந்த மேனியினையும் உடைய திருவருளம்மையைக் கலந்ததனாலெனப் புலனாம். அக்கலப்பால் பதியென்னும் பொருளுடைய இறையவனாவன். இங்ஙனம் கலந்து மகிழ்வனவெல்லாம் அறிதற்கரியன. மாயம்: அறிதற்கரியன. (அ. சி.) தெருவும் புகுந்தமை - வெளியிட்டமை. (94) 1225. மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித் தாயம் புணர்க்குஞ் சலநதி அமலனைக் காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி ஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே. (ப. இ.) வளரும் திருச்சடையினையுடைய சிவபெருமான் மாயா காரியமாகிய உலகு உடல் கலன் ஊண் முதலியவற்றை இயைந்தியக்கிப் படைத்தருள்வன். அவனே திருவடிப் பேற்றைச் சாரும் கூட்டுறவை நல்கியருள்வன். மறைப்பாற்றலாகிய சலநதியைத் (1223) தாங்குபவனும் அவனே. இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய இறைவன் உயிர்களுக்கு வினைக்கீடாக உடலையளித்துக் கூட்டுவிப்பன். இவையனைத்தும் திருவருளோடு கூடிய கூட்டங்காரணமாக நிகழ்வன. மாசத்தி - திருவருள். யோனி - காரணம். உலகு - புவனம். உடல் - தனு. கலன் - கரணம். ஊண் - போகம். (அ. சி.) மாயம் புணர்க்கும்-மாயையின் பரிணாமங்களாகிய உடல் - கருவி - உலக போகங்களைக் கொடுக்கும். அடித்தாயம் - திருவடி ஞான உரிமை. சலமதி - கங்கையையும் மதியையும் தரித்த காயம் புணர்க்கும் - உயிரை உடலுடன் கூட்டும். (95) 1226. உணர்ந்தொழிந் தேனவ னாமெங்கள் ஈசனைப் புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரை அணைந்தொழிந் தேனெங்கள் ஆதிதன் பாதம் பிணைந்தொழிந் தேன்றன் அருள்பெற்ற வாறே.1 (ப. இ.) எங்கள் ஆண்டவனை அவனருளால் உறுதியாகவுணர்ந்தேன். அவனே புவனமாகிய உலகமுதல்வன். அவனைப் புணர்ந்தேன்; அணைந்தேன். எங்கள் ஆதியையுடைய முழுமுதல்வனைப் பின்னிக் கிடந்தேன். இவையனைத்தும் திருவருள் தரப்பெற்றவாறென்க. (அ. சி.) பிணைந்து - கலந்து. (96)
1. புல்லிக். திருக்குறள், 1187. " சூடுவேன். 8. திருவம்மானை, 17.
|