568
 

விளையும் பிறப்பு இறப்பாகிய நிலைகளும், அந் நிலைகளுக்குக் கருவியாகிய மாயா காரியமான மூலப்பகுதியும், இறை உயிர் தளையாகிய பதிபசு பாசங்களின் உண்மை உணரும் மெய்யுணர்வும், ஒற்றுமை வேற்றுமைப் பொருள்களின் தொடர்புகளும் சார்புநிலையாம் தன்னொடு கண்டவர் சன்மார்க்கத்தவராவர். பின்னியஞானம்: புணர்ப்புணர்வு; அத்துவிதம்.

(அ. சி.) அன்னிய பாசம் - தனக்கு வேறாய்ப் பாசம் உண்டு என்றும், ஆகும் கருமம் - பாசத்தால் கன்மம் உண்டு என்றும், முன்னும் அவத்தையும் - அக் கன்மங் காரணமாகப் பிறப்பு இறப்புக்களாகிய அவத்தைகள் உண்டு என்றும், மூலப் பகுதியும் - அவத்தைக் கேதுவான மூலப் பிரகிருதி உண்டு என்றும், பின்னிய ஞானம் இவைகளை அறியும் அறிவு உண்டு என்றும், பேதாதி பேதமும் - இவைகளின் பேதங்களையும், தன்னொடும் - ஆன்மாவையும். கண்டவர் - கண்டு ஆராய்பவர்.

(9)

1459. பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்து
ஒசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்று
அசைவான தில்லாமை யானசன் மார்க்கமே.

(ப. இ.) ஆணவப் பிணிப்பால் ஏற்படும் தன்முனைப்பாம் சிற்றுணர்வுத் தன்மை முனைப்பி அல்லது பசு எனப்படும். அத்தகைய பசுத் தன்மையினையும் பாசத் தன்மையினையும் நீக்கி முழுமுதற் சிவமாகிய பதியுடன் கூட்டி வைப்பதும் நன்னெறியாகும். ஒன்றாலும் இளகிக் கசியாத உள்ளத்தினைக் கசியச் செய்து என்றும் பொன்றா உண்மை ஆவித் தன்மையைத் தோன்றச் செய்வதும் அந் நன்னெறியேயாம் என்றும் துளக்கமின்றித் திருவடி நிறைவில் அழுத்துவித்து வாழச் செய்வதும் அந்நன்னெறியேயாகும்.

(அ. சி.) ஒசியாத - கெடாத. சொரூப உதயம் - ஆன்மாவின் இயற்கை உருவம்.

(10)

1460. மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர்
மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே.

(ப. இ.) நன்னெறியாகிய சன்மார்க்கம் தன்னைச் சார்ந்த சன்மார்க்கிகளாகிய நல்லார் எய்தும்படி வகுப்பது சன்மார்க்கமேயன்றி வேறொன்றில்லை. அந் நன்னெறி நிலையினை எய்துவோர் செல்லும்வழி நன்னெறிக்கு வாயிலாகிய சித்தயோகமேயாகும். சித்தயோகம் என்பது ஆருயிரின் எண்ணம் ஓவாது சிவத்தின்பால் கூடியிருப்பது. அதனைச் சிவயோகம் எனவுங் கூறுவர்.

(அ. சி.) சித்தயோகம் - சிவராச யோகம்.

(11)