(ப. இ.) இறப்பில் தவமாகிய சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் நன்னெறி நால்வகையால் நல்வினைப் பயனும் தீவினைப் பயனும் ஆகிய இரண்டிலும் உள்ளந்தோயாமல் உடல்தோய நின்று ஒப்புக் கொள்ளும் நிலை வந்தால் திருவருளாற்றல் சிவகுருவாக வெளிப்பட்டு வந்து ஆருயிர்கள்பால் முன்கிடந்த மருட்குணம் பலவற்றையும் நீக்கி அவ்வருள் தந்தருளுமென்று சிறப்பித்துச் சொல்லப்படும் திருவடியுணர்வினை நல்கும். அவ்வருளுணர்வால் ஆருயிரின் முனைப்பாகிய தஞ்செயலற்றால் ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலமும் தீரும். அம்மலம் தீர்ந்தால் அவ்வுயிர் சிவன் அவன் என்னும் சிறப்பினை எய்தும். இருவினையொப்பினை வருமொப்பால் காண்க : சந்தனமும் சாணகமும் சார்ந்த கூலிக்கெடுப்பார், எந்த மணமும் வரையார் இங்கு. (அ. சி.) இருவினை நேரொப்பு - புண்ணிய பாவத்தில் சம உணர்வு. திரிமலம் - ஆணவம், கன்மம், மாயை. (1) 1502. மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ் சால விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள் ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந் தூனை விளக்கி யுடனிருந் தானே.1 (ப. இ.) மாலைக் காலத்தில் இருட்டைப்போக்கி ஒளியை நல்கும் திருவிளக்கும், அதுபோன்ற மதியமும், பகலில் அதுபோன்று ஒளியை நல்கும் ஞாயிறும் விளக்கம் தருமாறு அவற்றிற்கு விளக்கம் அருளும் தனிச்சுடர் அண்ணலாகிய சிவபெருமான், ஆருயிர்களுக்கு உயிர்க்குயிராய் உண்ணின்று திருவடியுணர்வினை விளக்குதற் பொருட்டுத் தானே முழுமுதல் தலைவன் என அருளி என் உள்ளே புகுந்துநின்றவனும் அவனே. அங்ஙனம் புகுந்தருளியதோடமையாது உடம்பின் மெய்ம்மைத் தன்மையினையும் விளக்கியருளி உடனாய்நின்றனன். (அ. சி.) ஊனை - சரீரத்தை. (2)
புறச்சமய தூடணம் (பிறநெறிப் பீழை) 1503. ஆயத்துள் நின்ற அறுசம யங்களுள் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.2 (ப. இ.) விரிவின்றிச் சுருங்கிய கட்டினுள் ஒடுங்கிநிற்கும் முக்கூற்றுப் புறச்சமயங்களினுள்ளும் மேல் ஆராய்தலின்றி அது அதுவே மெய்ம்மையென மயங்கி நிற்கின்றவர் 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்' ஆக எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானைக் காணமாட்டார். மெய்ப்பொருள் காணாமையால் மீண்டும் பிறப்பதற்கே ஆளாகி மாயக்
1. இல்லக. அப்பர், 4. 11 - 8. " நாடி. " 5. 1 - 10. 2. காயமே, " 4. 76 - 4.
|