கீழுலகத்தாவன. சலமகள் வீற்றிருக்கும் திருமுடி தூய வானகத்துக்கும் அப்பாலாகும். அறமுறையே சிறந்த சிவனார் திருமேனி விசும்பாகத் திகழும். ஆதியாகிய சிவபெருமான் உலகமே யுருவமாகக்கொண்ட திருக்கோலம் இதுவாகும். (அ. சி.) போது புனை - அன்பர்களால் சூட்டப்படும் மலரினை அணிந்த. மாது புனை - கங்கையைத் தரித்த. ஆதி உற நின்றது - அண்ட உருவமாய் நின்றது. (12) 1695. தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாந் திரைபொரு நீரது மஞ்சன சாலை வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை கரையற்ற நந்தி கலையுந் திக்காமே. (ப. இ.) நிலத்தின்கண் அமைந்த ஆவுடையார் ஆகிய சத்தியின் மேல் சிவலிங்கம் விண்ணாகும். அலைபெருகும் கடல்,அச் சிவபெருமான் திருமுழுக்குச் செய்யும் திருமஞ்சனசாலையாகும். அவர் முழுகும் திருத்த நீர், மலையில் தவழும் உலையா மேகங்களாகும். திருமேனியில் சூடும் மாலை, விண்ணின்கண் காணப்படும் எண்ணிலா விண்மீன்களாகிய உடுக்களாகும். தத்துவங்கடந்த எல்லையிலாச் சிவபெருமானுக்குத் திரு ஆடை, எட்டுப் புலன்களாகும். உடு நட்சத்திரம். புலன் - திசை. (அ. சி.) தரை உற்ற சத்தி - தரை ஆவுடையார். இலிங்கம் விண் ஆகாயம் இலிங்கம். திரை பெறுநீர் - கடல். மஞ்சன சாலை - நீர் ஆடுதற்குரிய இடம். வரை தவழ் மஞ்சு நீர் - வரைகளின்மேல் தவழும் மேகம், கங்கைநீர். வான் உடுமாலை - வானத்தில் விளங்கும் மீன் கணங்கள் ஆகாய இலிங்கத்தின்மேல் விளங்கும் மாலையாகும். கரை அற்ற நந்தி - தத்துவங்கடந்த நந்தியெம்பெருமான். (13)
3. பிண்டலிங்கம் (உடற் சிவம்) 1696. மானுட ராக்கை வடிவு சிவலிங்கம் மானுட ராக்கை வடிவு சிதம்பரம் மானுட ராக்கை வடிவு சதாசிவம் மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே. (ப. இ.) மக்கள் யாக்கையின் வடிவு சிவலிங்கம்; மக்கள் வடிவு திருச்சிற்றம்பலமாகும்; மக்கள் வடிவு அருளோனாகிய சதாசிவன்; மக்கள் வடிவு அம்பலவாணர் இயற்றும் அருட்பெருங்கூத்து; சிவ பெருமான் மக்கள் யாக்கையை நடமாடுந் திருக்கோவிலாகக் கொண்டு வடிவாய் அரங்காய் வகுப்பாய் வாழ்வாய்ப் பயனளித்தருள்கின்றனன். (அ. சி.) ஆக்கை வடிவு - சரீரத்தின் அமைப்பு. (1)
|