748
 

21. விந்துசயம் - போகசரவோட்டம்

1900. பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற வுள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானுமே.

(ப. இ .) இணைவிழைச்சாகப் பார்க்கின்ற மாதரைத் தான் பாராது விலகிப்போய்ச் சிவத்தையே இடையறாது நினைக்கின்ற நெஞ்சம் நெகிழ்ந்து மேலும் உருகும்படி மூலத்திடத்துத் தழலினை மூட்டிப் புறத்தே பிறவிக்குவாயிலாக அவாவுடன் பார்க்கின்ற கண்ணாசை முற்றும் நீங்க மூலத்திடத்திருந்து நடுநாடி வழியாக உயிர்ப்பினை மேலேற்றிச் செலுத்திப் பயில்வோர் அகத்தவத்தவராய சிவயோகியராவர். உடனுறை வின்பம்; ஆண்பெண் சேர்க்கை.

(அ. சி.) மூலத்தே சேர்க்கின்ற - மூலாதாரத்தில் வீணாத் தண்டு ஊடே விந்துவைச் செலுத்துகின்ற.

(1)

1901. தானே யருளாற் சிவயோகந் தங்காது
தானேயக் காமாதி தங்குவோ னும்முட்குந்
தானே யதிகாரந் தங்கிற் சடங்கெடும்
ஊனே யவற்றுள் ளுயிரோம்பா மாயுமே.

(ப. இ .) திருவருள் நாட்டத்தால் மேலோதியவாறு சிவயோகத்தில் உறைத்துநில்லாது ஒருவன் காமம் முதலாகச் சொல்லப்படும் மருட்பகை ஆறினுட் தங்குவோனாயின் அவன் பெரிதும் அஞ்சுவன். அதன்மேல் யோகப்பேற்றை ஆட்டுவிக்கும் அதிகாரத்திற்குப் பயன்படுத்தி அவ்வதிகாரத்திலே தங்கினால் உடல் கெட்டொழியும். உடம்பினுள் உயிர் மேல்நிலைக்குச் செல்லாமல் பிறந்து இறந்து உழலும் கீழ் நிலையில் புகும்படித் திருவருள் ஓம்பாது கைவிடும். உடலும் பயனின்றி அழியும்.

(அ. சி.) சிவயோகம் தங்காது - சிவயோக மார்க்கத்தில் நில்லாமல். உட்கும் - கெடும். ஓம்பா - காக்கப்படாமல்.

(2)

1902. மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
ஏயாவெண் ணாளின்ப மேற்பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்து ளாதிநாள் ஆறாமே.

(ப. இ.) உலகியல் வாழக்கையில் மங்கை நல்லாளைக் கூடுதல் வேண்டுமென்னும் வேட்கை உண்டாயின் மாறிமாறி வருகின்ற வளர்பிறை தேய்பிறை என்னும் இரண்டு பக்கத்துள், வளர்பிறைப் பக்கத்துள் முன் எட்டுநாள் இன்பமும் பொருந்தாமல், ஞாயிற்றினுக்குரிய பின் ஆறு நாளுமே இன்பம் பெறுக. இதுபோல் தேய்பிறையில் முன் ஆறுநாளும்