75
 

நிகழும் உண்மையினை ஒருபுடை யொப்பாக உணரலாம். தூக்கம் : மறை கடந்த இன்பத்துயில் என்றலுமாம். புலனாம் உடலுரையிற் போக்கற்றே யுள்ளம் நலனுணர்வில் போகுவர் சோம்பர்.

(16)

173. தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே1
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

(ப. இ.) தூங்காமல் தூங்கி அறிதுயிலாய் நிற்கும் மெய்யன்பர்கள் சிவவுலகமும் தம்முளே சிவனை நினைவதாலும் அவன் படைப்பாம் உலகினைத் தம் முனைப்பாக நினையாமையாலும் தம்முட் கண்டனர். உலகைக் காரிய வடிவமாகும் மாயை என்றுமட்டும் கருதாமல் அதனைப் படைத்தருளிய வினைமுதற் காரணனெனப்படும் சிவபெருமானின் திருவருட் பண்புகளையுந் தெருண்டு தம்முள் கண்டனர். அதுபோலவே சிவனை விட்டு்ப் பிரியாது ஒட்டிநிற்கும் சிவயோகமும் தம்முள்ளே கண்டனர். அதுபோல் சிவபோகமாகிய திருவடி நுகர்வினைத் தம்முள்ளே கொண்டனர். அதனால் நிலையா உலகை மறந்து நிலைக்கும் சிவனை உலையாவுணர்வில் உழந்துணர்ந்து நிற்பார் தூங்கிக் கண்டார். அவர் தம் திருவடிப் பேற்றின் பொருவரு நிலையினை ஒருவராலும் கூறவொண்ணா தென்க. தூங்கல்: தூங்காமல் தூங்கல்; அறிதுயில். இது புரிவு நிலையில் நான்காம் நிலை. புரிவுநிலையினைச் சுத்தாவத்தை என்பர். இதன்கண் துரியநிலை நிட்டையே தூங்காமல் தூங்கல்.

(அ. சி.) தூங்கி - செயலற்றிருந்து.

(17)

174. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருட்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர்மா ணிக்கமே.

(ப. இ.) ஒப்பில்லாத ஐவகை மன்றத்தும் ஆருயிர் நெஞ்சத்தும் சிவகாமியம்மையார் ஆருயிர் உய்தற் பொருட்டுக் கண்டுகளிக்கச் சிவபெருமான் எப்போதும் திருக்கூத்தாடுகின்றனன். அவன் அறிவு வெளியாகிய செவ்வானிற் காணப்படும் இயற்கைச் செழுமைவாய்ந்த செஞ்சுடர் மாணிக்கமாவன். திருவருள் துணையால் விளக்க விளங்கும் ஆருயிரின் அறிவின் எல்லை சென்ற நிலையின் வண்ணம் ஆதியையுடைய அரன் அவ்வுயிர்கட்கு அருள் செய்வன்.

(18)

175. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.


1. பரையுயிரில், எப்பொருள்வந், பாதங்கள்.

உண்மை நெறிவிளக்கம், 4 - 6.