(ப. இ.) 'துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து, இறந்தாரை எண்ணிக்கொண்டற்று' என்பதுபோல ஆருயிரின் வடிவம் அளவிட்டுக் கூறவொண்ணாததாகும். அவ் வுண்மையினை ஒருவகையாக ஓதியருள்வாராயினர். உடல் கலன் உலகம் ஊண் முதலியவற்றுடன் பொருந்திய ஆருயிரின் வடிவினைக் கூறுவோமானால் பசுவினது மயிர் ஒன்றினை எடுத்து நூறுபங்கு செய்தல்வேண்டும். பின்பு அந் நூற்றினில் ஒன்றினை எடுத்து ஆயிரம் கூறுசெய்தல்வேண்டும். அந் நிலையில் ஏற்படும் ஒரு கூற்றினை நூறாயிரம் கூறுசெய்தால் எவ்வளவு ஏற்படுமோ அவ்வளவாகும் ஆருயிரின் வடிவமென்க. எனவே, ஆருயிர்க்கு வடிவமின்றென்னும் வாய்மையினை வனப்புற வகுத்து ஓதுவதிது. (அ. சி.) கோ - பசு. ஆவி - சிவன். (7) 1975. உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலுங் குணமில்லை யாயினும் பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே. (ப. இ.) இயற்கையுணர்வும் முற்றுமுணர்தலும் ஒருங்கியைந்த தூய அறிவினையுடையவன் சிவன். அதனால் அவன் தெளிவினன் என்று ஓதப்படுகின்றனன். அவன் எல்லாவற்றுடனும் பிரிப்பின்றி நிற்கும் பெரியோன். அதனால் விட்டுப்பிரிந்து தனித்துநிற்கும் பண்பு அவன்பால் என்றும் இல்லை. ஆயினும், தொன்மையிலேயே அவனுடன் நீக்கமற நின்று அகத்தவம் பயின்றுவரும் ஆருயிர் பின்பு அவன் திருவருளால் அவன் திருவுருவினைக் காணும். காண்டலும் கருத்தகத்து அவன் திருவுருப்பெற்று இன்புறும். (அ. சி.) தெளிவன் - சிவன். பயில் சீவனார் - யோக நெறி பயின்ற சீவன். (8) 1976. மாயா வுபாதி வசத்தாகுஞ் 2சேதனத் தாய குருவரு ளாலே யதில்தூண்ட ஓயும் உபாதியோ டொன்றினொன் றாதுயிர் ஆய துரியம் புகுந்தறி வாகவே. (ப. இ.) ஆருயிர்க்கு மாயாகாரிய உடம்பு தடைபோன்றதாகும். அதனால் அதனை மாயாஉபாதி என்பர். அவ் வுடலகத்துப் புகுந்து நிற்கும் ஆருயிர் சேதனமாகிய அறிவுடையது. அவ் வறிவுடைய உயிரைத் தனக்கு உடலாகக்கொண்டு சிவபெருமான் சிவகுருவாக எழுந்தருள்வன். அச் சிவகுரு அகத்தவமாகிய யோகியரை அதன் மேனிலையாகிய அறிவுநிலைக்குத் தூண்டியருள்வன். அங்ஙனம் தூண்டவே யோகத்தடைகள் நீங்கும். அப்பொழுது ஆருயிர் உடல் கலன் உலகு உணா என்னும் நால்வகைப் பற்றினுள் ஒன்றினும் பற்றின்றி நான்காம் நிலையாகிய பேருறக்கத்தினை எய்தும். பேருறக்கம் எனினும். துரியநிலை எனினும் ஒன்றே. அந் நிலையினை எய்தித் திருவடியுணர்வாகவே நிற்கும். உபாதி - தடை.
1. பல்லான்ற. நாலடியார், 106. 2. மன்னவன்தன். சிவஞானபோதம், 8.
|