880
 

2185. துரிய தரிசனஞ் சொற்றோம் வியோமம்
அரியன தூடண மந்நன வாதி
பெரியன கால பரம்பிற் றுரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே.

(ப. இ.) துரியம் எனப்படும் புரிவுக்காட்சி பேரறிவுப் பெருவெளியைக் காண்பதெனக் கூறினாம். வியோமம் - அறிவுவெளி சொல்லப்படும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் முதலியன தடையெனக் கழித்து நன்னடைக்குக் கொண்டுவர வேண்டியதொன்று. புரிவு - சுத்தம். காலங்கடந்த எங்கும் பரம்பிய பெரியனவாகிய புரிவு அருமைசேர் அப்பாலதாகும். அதீதம் - அப்பால். ஆருயிர் அப்பால் நிலையாகிய அந் நிலையினில் நிலைபெறும்.

(39)

2186. மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதன் மாயையாங்
கேவல மாகுஞ் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துட் சீவனே.

(ப. இ.) சேதனனாகிய அறிவுடைய ஆருயிர் மாயையிற் பொருந்தி மூலப்பகுதியோனாவன். திருவருள் மாயையைக் கூட்டுவிப்பது மாயையில் நிலைப்பிப்பதற்காகவன்று. மாயையைக்கூட்டி மலத்தை வாட்டி அம் மலத்துடன் கூட்டி அம் மாயையினையும் ஒருங்கு நீக்குவிப்பதற்கேயாம். உடம்பு உறையுள் முதலியவற்றின்கண்ணுள்ள அழுக்கைப் போக்கத் தூய தண்ணீரைவிட்டு அவ்வழுக்குடன் அத் தண்ணீரையும் சேர்த்து நீக்குவது இதற்கு ஒப்பாகும். மாயையுடன் கூடாத நிலையைப் புலம்பென்றும், கூடிய நிலையைப் புணர்வு என்றும், நீவுதலாகிய அகற்றும் நிலையினைப் புரிவு - என்றும் கூறுப. புலம்பு - கேவலம். புணர்வு - சகலம். புரிவு - சுத்தம்; துரியம். நால்வகைத் தோற்றத்து எண்பத்துநான்கு நூறாயிர வேறுபாட்டுப் பிறப்பினுள் பிறப்பது புணர்ப்பாகும். துரியமாகிய புரிவின்கண் ஆருயிர் அருள் நிலைக்களத்துத் தங்குதல் புரியும்.

(அ. சி.) சேதனன் - ஆன்மா. நீவுதல் - ஒழித்தல்.

(40)

கேவல சகல சுத்தம்(புலம்பு புணர்வு புரிவு)

2187. தன்னை யறியத்தன் றற்கேவ லன்றானும்
பின்ன முறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத 1சத்துடன்
துன்னுவர் தத்தந் தொழிற்கள வாகவே.


1. சத்தசத். சிவஞானசித்தியார,் 7. 3 - 1.

" யாவையும். சிவஞானபோதம், 7.

" நெஞ்சினைத். அப்பர், 4. 23 - 9.