நெறியென்று கருதி. பெயர்ந்த பெருவழி - சென்றடைந்த பிற சமயங்கள். ஆர்ந்தவர் - அவ்வச் சமய ஒழுக்க நெறி நின்றவர். அண்டத்துப் புக்கு - அவ்வச் சமயங்களுக்குத் தக்க போக பூமிகளில் சென்று புசித்து நீங்கி அருணெறி போந்து - பூமியில் மறுபடியும் திருவருள் கூட்ட உட்சமயங்களில் புகுந்து படிப்படியாக மேலேறி. புனைந்து புணர் நெறியாம் - பின் உண்மை இதுவென்று கண்டு அதனைப் புகழ்ந்து கைக்கொண்டு அடையும் சன்மார்க்க நெறி ஆகும். (8) 1540. ஈரு மனத்தை யிரண்டற வீசுமின் ஊறுஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே வாரும் அரனெறி மன்னியே முன்னியத் தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே. (ப. இ.) திருவருள் துணையால் பொறிபுலன்வழிச் செல்லும் மனத்தை அடக்கி ஆளுங்கள். வேறுபட்ட நெறிகளிற் செல்லும் செலவினை அகற்றுங்கள். இகரம் ஊர்ந்த சகரத்தை-சி என ஒட்டெழுத்துடன் அஃதாவது வ என்னும் எழுத்தும் சேர்த்துச் 'சிவ' என ஓதுங்கள். அங்ஙனம் ஓதிவருங்காலத்து அரனெறியில் நிலைத்துச் சார்பாகக் கருதப்படும் 'ய' கரத்தையும் கூட்டிச் 'சிவயசிவ' என ஓதுங்கள். அங்ஙனம் ஓதுங்கால் அடிப்படைச் சிவஒளி உள்ளொளியாகத் தோன்றும் என்க. இகரமாகிய இன்பப்பேறு ஆருயிர்கட்கே உரியது. அதனால் ஆருயிர் இகரம் எனக் குறிக்கப்படும். சிவபெருமான் அறிவின்பாகவும் ஆருயிர் இன்பியாகவும் அழைக்கப்படும். 'சி' 'ச்+அ+இ' ச்:ச. சத்து உண்மை. திருவருள். அ: அறிவு - சிவன். இ: இன்பு - திருவடி: இன்பி - இன்பந் துய்க்கும் ஆருயிர். எனவே 'சி' என்னும் சிறப்பின் முதலெழுத்து உண்மை அறிவு இன்பம் ஒருங்கமை ஓர் உருவாய்த் திகழும் உண்மை வண்மையுணர்ந்தின்புறுக. இது 'சிவயநம' வின் முதலெழுத்தாதலும் நோக்குக. (அ. சி.) ஈரும் மனம் - சலிக்கும் மனத்தை. இரண்டற - ஒரே நிலையில் நிற்க. ஊரும் சகரம் - சி. வாரும் அரனெறி மன்னி - வ எழுத்தைச் சேர்த்து. முன்னி - எண்ணிய. உயிர் தூரும் - மண்டி இருக்கும். (9) 1541. மினற்குறி யாளனை வேதியர் வேதத் தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின் நயக்குறி காணில் அரனெறி யாமே2 (ப. இ.) அகத்தவமாகிய யோகக் காட்சியில் சிவபெருமான் மின்னல் போன்று அறிவொளி அருள்வன். அத்தகைய சிவபெருமானைத் திருநான்மறைவல்ல சிவமறையோன் அம் மறையிற் குறித்தபடி சிவனை முழுமுதலாக்கொண்டு செந்தழல் ஓம்பும். சிவவேதியராகிய அந்தணர்க்கு அவ்வனல் வடிவாகத் தோன்றிருள்வன். அவனே ஆதிப்பிரானாகிய அம்மையப்பனாவன். மெய்யன்பர்கள் நினைக்கும் நினைவுக்குறியாகிய திருமேனி கொண்டருள்வன். செறிவு நோன்பு சீலமாகிய முத்திறத்தார்க்கும்
1. இவனுலகில். சிவஞானசித்தியார், 10.
|