1882. ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளங் குப்பாய மீதினி விட்டா சனத்தினின் மேல்வைத்துப் போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்து மீதி லிருத்தி விரித்திடு வீர்நீரே. (ப. இ.) செந்நெறிக்கு உளமாக ஓதப்படும் திருவெண்ணீற்று முழுப்பூச்சு குப்பாயம்போல் அமைத்தல்வேண்டும். இருக்கைமேலும் திருவெண்ணீறு குவித்தல்வேண்டும். அதன்மேல் திருமேனியை எழுந்தருளுவித்தல்வேண்டும். மணப்பொடியும் திருவெண்ணீறும் மேலும் பொலிவித்தல்வேண்டும். அதன்மேல் திருமேனியைச் செம்மையுற இருத்துவீராக. செந்நெறிக்கு உயிராவது திருவைந்தெழுத்து; உடல் சிவமணி. சிவமணி - கடவுட் கண்மணி. (உருத்திராக்கம்). (அ. சி.) குப்பாயம் - சட்டை. சுண்ணம் - வாசனைப்பொடி. (10) 1883. விரித்தபின் னாற்சாரு மேவுதல் செய்து பொரித்த கறிபோ னகமிள நீருங் குருத்தலம் வைத்தோர் 1குழைமுகம் பார்வை தரித்தபின் மேல்வட்டஞ் சாத்திடு வீரே. (ப. இ.) மேலோதியபடி அமைத்தபின் சாருமணை பொருந்த வைத்து அதன்மேல் பாவாடை விரித்து இலையமைத்துப் பொன்போல் பொரித்த கறிவகைகளும், போனகமாகிய திருவமுதும் இளநீரும் சிவகுருவின் திருமுன்னிலையில் படையுங்கள். அத் திருவுருமுன் குழை முகப்பார்வை தரித்தலாகிய நைவேத்தியம் கண்டபின் மேற்கட்டியமைத்துவேண்டுவ செய்வீராக. (அ. சி.) சாரு - சாய்மணை. போனகம் - சோறு. குருத்தலம் - குருவின்முன். மேல்வட்டம் - மேல்நிலை. (11) 1884. மீது சொரிந்திடும் வெண்ணீறுஞ் சுண்ணமும் போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் பாத வுதகத்தான் மஞ்சனஞ் செய்துபார் மீதுமூன் றுக்குமூன் றணிநிலஞ் செய்யுமே. (ப. இ.) மேலே மழைபோற்பொழியும் திருவெண்ணீறும், மணப் பொடியும், பலவகை நறுமலரும், தருப்பைப் புல்லும் வில்வமும் கைக் கொண்டு சிவபெருமான் திருவடி விளக்கிய திருத்தநீரால் திருமஞ்சனஞ் செய்து, மேற்கூறியவற்றால் வழிபாடு செய்க. வழிபடற்குரிய காலம் மூன்று, கருவி மூன்று, பணி மூன்று, கருத்து மூன்று ஆதலின் மூன்றுக்கும் மூன்று அழகிய இடம் அமைப்பீராக. காலம்: காலை, நண்பகல், மாலை. கருவி மூன்று: உள்ளம், உரை, உடல் பணிமூன்று: அன்பு, அறிவு, ஆற்றல் கருத்து மூன்று: அன்பு, இன்பு, அடைவு. அன்பு, கூடும் அன்பினில் கும்பிடுவோர். இன்பு: பேறுவேண்டும் வீறினர். அடைவு: உலகியல்வேண்டும் நிலையினர். (12)
1. அழகே. 8. குழைத்த பத்து, 10. " தூயதிரு. 12. சிறுத்தொண்டர், 14.
|