நிலைகளின் முடிவாகிய சிவபேருயிரின் அந்தத்தின்கண் நன்மை வடிவாம் சிவபோதம் தலைப்படும். தவநிலையாகிய அப் போத வண்ணமாய் ஆருயிர் தன்னை அருளால் ஆக்கிக் கொள்ளும். அப்பொழுது அவ்வுயிர் நன்மையாய்த் திகழும். இதனால் திருவடி யுணர்வுடைய சீரியோர் நல்லார் என நவிலப் பெறுவர். (அ. சி.) சிதைய - ஒடுங்க. பாறிப்பறிய - போயொழிய. நவமான அந்தம் - சிவசுழுத்தி. (3) 2500. முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந் தன்சொல்லில் எண்ணத் தகாவொன்பான் வேறுள பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத் தன்செய்த வாண்டவன் றான்சிறந் 1தானன்றே. (ப. இ.) முன் (2497) ஓதிய பொருவில் பற்றுச் சேர் ஒன்பதனுள் முன் பொருந்தும் மெய்கள் தன் சொல்லினால் கருதிச் சொல்லத்தகாதன ஒன்பதாகும். பின் சொல்லப்படும் ஒன்பது மெய்களும் வேறுள. இவ்வகையாகச் சொல்லப்படும் பதினெட்டையும் ஒழித்துவிட்டு ஆருயிர்களைத் தானாகச் செய்தருளிய சிவபெருமான் ஒருவனுமே சிறந்தோனாவன். உயிரினும் சிறந்த அச் சிவபெருமானை உள்ளன்புடன் ஓவாது தொழுது உய்வதே சிறப்பென்க. முன்னுறு என்பதற்குக் கருதப்படுகின்ற என்றலும் ஒன்று. (அ. சி.) முன்னுறு - கருதப்படுகின்ற. ஒன்பான் - அபிமானி ஒன்பது. பேர்த்திட்டு - ஒழித்துவிட்டு. தன் செய்த - சிவமாகச் செய்த. (4) 2501. உதந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும் இகந்தன வல்வினை யோடறுத் தானே. (ப. இ.) தனிமுதல் உயர்வு தமக்கென அமைந்த பதினான்கு நூல்களையும் உலகினர்க்குப் பகர்ந்தருளிய பெருமான் ஆலமர் செல்வனாவன். அப் பெருமானின் பண்பினை நாடி மனமொருங்கி எம்பெருமான் என்று இரவும் பகலும் இடையறாது ஏத்தவன். ஏத்தவே ஆருயிரின் வன்மையினைக் கடந்துள்ள வல்வினையோடு பிறப்பினையும் அறுத்தருளினன் சிவன். செந்தமிழ்த் தெய்வமாம் சிவபெருமான் திருவருளால் இப்பொழுது ஈடும் எடுப்புமில்லாப் பீடுசேர் மெய்கண்ட நூல்கள் நாடுய்ய விளங்குவன பதினான்கு. இப் பதினான்கும் மேலோதிய பதினான்கிற்கும் ஒருபுடை யொப்பாகக்கொள்ள அமைத்தருளிய அருளை யுன்னி யுன்னி அகமகிழ்க. (அ. சி.) ஒன்பதும் ஐந்தும் - பதினான்கு அறிவு நூல்களும். (5) 2502. நலம்பல காலந் தொகுத்தன நீளங் குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும் பலம்பல பன்னிரு கால நினையும் நிலம்பல வாறின னீர்மையன் றானே
1. தன்னை. சிவஞானபோதம், 12. 4 - 3.
|