1049
 

29. ஞானி செயல்

2564. முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி 1னாலன்றே.

(ப. இ.) 'ஞான மெய்ந்நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொல்' ஆதலால் அந்நெறி யொழுகலே ஆருயிர்களின் அருங்கடன். அங்ஙனம் ஒழுகுவார்க்கு வரும் ஊழ்வினை அவர் உடலொடும் ஒட்டியழியும். அதற்குக் காரணம் அப் பெருந்தகையார் உள்ளம் முன்னோன் திருப்பெயராம் திருவைந்தெழுத்தினை இடையறாது உண்டு கொண்டேயிருப்பது. அதனால் அவ் வூழ் அவர் உள்ளத்துச் செல்ல அஞ்சும். அஃதாவது ஊழ்வினையனைத்தும் உடையவனாகிய சிவபெருமானால் ஆருயிர்க்கு நல்குவதாகும். அவன் அவ் வினையினை நல்குவது தன்னை நினைவித்தற்பொருட்டேயாம். அவ் வினையும் அவ் வுயிரை அடைவது நினையுமாறு செய்தற்கேயாம். அவ் வுயிர் திருவடியை இடையறாது நினைப்பின் அவ் வூழுக்கு ஆண்டு வேலை ஏதும் இல்லை. ஆதலால் அவ்வூழ் செயலற்று அழியும். இவ் வுண்மையினைப் புலப்படுத்துவதே 'கூற்றங் குதித்த நோற்றலின் ஆற்றல் சேர்' மார்க்கண்டேயர் திருவரலாறாகும். ஆயின் அவ் வூழ் செயல் செய்ய முனையாமலல்லவா அகலுதல்வேண்டும். முனைந்த தென்னெனின்? ஊழை வெல்லுதல் எவர்க்கும் முடியாதென்னும் கொள்கை பீழைப் பிழைபாடுடைய தென்பதையுணர்த்துதற்கும், தாளாண்மையிற் றலை நிற்கும் வேளாளராம் சிவனடியார்கட்கு மட்டும் முடியு மென்பதை நாட்டற்கும், கூர்மிகு கணை உளம்புகாது உடலிற்பட்டு மீள்வது போன்று ஊழும் மீளும் என்பது காட்டற்கும் நிகழ்ந்த தென்க. ஊழை வெல்லும் படை முன்னோன் நாமத் தஞ்செழுத்து. சிவனடியார் வேளாளராவது அவர் தம் ஆவியும் உடலும் உடைமையும் சிவபெருமானுக்கு உவந்தளிக்கும் ஒண்மையான் என்க. ஒருபுடையொப்பாக முறையே மெய்ப் பொருள் நாயனார், கண்ணப்பநாயனார். இயற்பகை நாயனார் ஈந்தமை காண்க. மேலும் பாடம் படியாதாரை அச்சுறுத்தியும் அடித்தும் படிக்கச் செய்ய ஆசான் கைக்கொள்ளுங் கருவி பிரப்பங்கோல் அக்கோல் படியாதாரை யன்றிப் படிப்பாரை ஏதுஞ் செய்யாமையும் இதற்கொப்பாகும். எல்லாரையும் நல்லாராயாக்குவதற்கு அமைந்த பாடி காவலரை நல்லார்கண்டு அஞ்சாமையும் ஒப்பாகும். உண்டல் - இடையறாது நினைத்தல். முன்னுண்டே நீங்குவர் - முன்னோனை நினைந்தே நீங்குவர். பின்னை வினையாகிய ஏறுவினைக்கண்ணும் உள்ளம் பொருந்துதற்கு வாயிலின்மை


1. நாடி. அப்பர், 5. 68 - 6.

" நாமல்ல. சிவஞானபோதம், 10. 2 - 1.

" சார்ந்தாரைக். " " 2.

" ஊழையும். திருக்குறள், 620.

" உணர்வின். 12. சம்பந்தர், 165.

" சிவாய. ஒளவையார், நல்வழி - 15.