1055
 

2576. கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.

(ப. இ.) ஆருயிர்க்கு மாயாகாரிய உடம்பு உலகங்களைப் படைத் தளிப்பதைக் கொதிக்கின்றவாறு எனக் கூறுவாராயினர். அப் பொருள்களைக் காத்தருளும் முறையினை குளிர்கின்றவாறென்றனர். துடைத்தருள்வதைப் பதிக்கின்றவாறு என்றனர். பாரக முற்றுக்கும் இம் மூன்று தொழிலும் உள்ளன. ஆருயிர்களின் உணர்வின்மாட்டுச் செய்யப்படும் மறைத்தல் அருளல்களும் கொள்ளப்படும். இவ் வைந்தொழில்களையும் திருவாணை மருவி ஒருவாது செய்யும் கடவுள் நிலையினர் ஐவர். அவர் முறையே அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் என அழைக்கப்பெறுவர். திருவடியுணர்வு கைவந்த அருளாளர் இவ்வைனவரயும் என்றும் விரும்பார். விரும்பும் ஏனையார்க்குப் படைக்கப் படவேண்டிய உடம்பிற் புகுவதற்குக் காரணமாகிய வினையை நூலென்று உருவகித்தார். அஃதாவது ஓருடம்பினின்று மற்றொருடம்பிற் புகுவதற்குரிய வினைத் தொடர்பு நேர்மை செய்யும் நூல் போன்றிருத்தலின் நூல் என்றருளினர். நொதிக்கின்ற: அருவருக்கின்ற.

(9)


31. பத்தியுடைமை

2577. முத்திசெய் ஞானமுங் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி 1தானென்றே.

(ப. இ.) வீடுபேற்றினை அளித்தருளும் திருவடியுணர்வாகவும், அவ்வுணர்வினை நல்கும் திருவைந்தெழுத்து மறையாகவும், நிற்பவன் சிவபெருமான். அவனே அனைத்துயிர்க்கும் அத்தனுமாவன். அவனே என்றும் பொன்றா வானவர் தலைவனுமாவன். அவனே இயல்பாகப் பாசங்களினின்றும் நீங்கிய தூயோனுமாவன். அவனே என்றும் மங்கா அறிவுப் பேரொளியுமாவன். அவனே மெய்யன்பர்களால் வழிபட்டுப் போற்றிப் புகழப்படும் பசுபதியாகிய இறைவனுமாவன்.

(1)

2578. அடியார் அடியார் அடியார்க் கடிமைக்கு
அடியனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் 2டானே.


1. அதுவிது. சிவஞானபோதம், 12. 4 - 1.

2. வினையா. " " 4 - 2.