1170
 

2818. பரனல்ல நீடும் பராபர னல்ல
உரனல்ல மீதுணர் ஒண்சுட ரல்ல
தரனல்ல தானவை யாயல்ல வாகும்
அரனல்ல ஆனந்தத் தப்புறத் 1தானே.

(ப. இ.) "சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மானாம்" செம்பொருள் பரன் அல்லன், அதனினும் சிறந்த நிலை பேறுள்ள பராபரனும் அல்லன், பேரறிவுப் பேராற்றல் வாய்ந்த பெரும் பொருளும் அல்லன், புணர்ப்பாய்நின்று மேலுணரும் ஒண்சுடரும் அல்லன். அனைத்தையும் தாங்கும் அரும்பொருளும் அல்லன். அவையனைத்தும் அல்லவாகும். அரனல்லன். திருவருளின்பமும் அல்லன். அவன் எல்லாவற்றுக்கும் அப்புறத்தாகநிற்கும் செப்பம்சேர் ஒப்பில் ஒருபெரும் பொருளாவன். அல்லன் என்பன அல்ல எனக் கடை குறைந்து நின்றன.

(7)

2819. முத்தியுஞ் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலாற்
சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.

(ப. இ.) முத்தியாகிய வீடும் சித்தியாகிய பேறும் கைகூடிய ஆருயிர்க்கிழவன் ஞானத்தோனாவன். ஞானம் - திருவடியுணர்வு. ஞானத்தோன் - திருவடிசேர் அடிமை; நாயன்மார். அத் திருவடியுணர்வு கைவந்தபின் பேரன்பாம் பத்திநிலை கைகூடும். அப் பத்தியுள் நின்றபின் பரத்தினுள் நிற்பன். பின் திருவருட் பெருந்திருவுள் நிற்பன். அவ்வாறு நிற்கும் நல்லோர்க்கு இயற்கை யுண்மைச் சிவன் கைகூடுவன். அதனால் பொருள் அருள் தூய்மையும் அகன்றோராவர். அவரே பேரின்பப் பேரறிவினராவர்.

(அ. சி.) மாசத்தி - திருவருட்சத்தி. தத்துவம் - மெய்யறிவு. சுத்தி அகன்றோர் - சுத்தாவத்தையைக் கடந்து சென்றவர்.

(8)

2820. துரிய அதீதஞ் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியுங் குவியும் விள்ளா மிளிருந்தன்
உருவுந் திரியும் உரைப்பதெவ் 2வாறே.

(ப. இ.) செயல்நுதலாகிய துரியமும், நினைவு அறுதலாகிய துரியா தீதமும் இத் தன்மைய என்று எவராலும் சொல்லொணாப் பாழாகும். அப்பால் நிலையாகிய துரியாதீதம் உயிர்ப்படங்கலாகும். அந்நிலையை எய்தினால், விரிதலாகிய நினைப்பும் குவிதலாகிய மறப்பும் உண்டாகா. ஆருயிர்களின் சுட்டறிவும் சிற்றறிவும் பேரறிவாகத் திரிந்துவிளங்கும்.


1. மண்ணல்லை. அப்பர், 6. 42 - 9.

" சிவனரு. சிவஞானசித்தியார், 1. 3 - 11.

2. உலகந். திருக்குறள், 425.

" கோட்டுப்பூப். நாலடியார், 215.