2902. உடலாங் குகையில் உணர்வாகும் பீடத்து அடலார் சமாதி இதயத்த தாக நடமா டியகுகை நாடிய யோகி மிடையாகா வண்ணம்சா திக்குமெல் வல்வே. (ப. இ.) உடலென்னும் குகையில், உணர்வென்னும் இருக்கையில் மல முதலியவற்றை வெல்லும் திண்மைவாய்ந்த நிட்டைகூடும் நிலையம் நெஞ்சமாகும். இந் நெஞ்சத்தை இடமாகக்கொண்டு இறைவன் நடமாடு கின்றனன். யோகியர் அவனையே நாடிநிற்கின்றனர். திருவருள் நினைவால் இடையூறு ஒருசிறிதும் நேராவண்ணம் நிட்டையினை நிலைபெறச் செய்தின்புறுவர். (அ. சி.) உணர்வாகும் பீடம் - உள்ளம் மிடையாகா வண்ணம் - இடறு இல்லாமல். (7) 2903. தற்பர மல்ல சதாசிவன் தானல்ல நிட்கள மல்ல சகள நிலையல்ல அற்புத மாகி யநுபோகக் காமம்போற் கற்பனை யின்றிக் கலந்துநின் றானன்றே.1 (ப. இ.) முழுமுதற் சிவபெருமான் தற்பரத் திருவுருவாம் ஆண்டானு மல்லன். அதன்மேலுள்ள அருளோனுமல்லன். உருஉறுப்புக்கள் உடையனுமல்லன். அவை இல்லானுமல்லன். இன்னவாறுள்ளான் என்று எவராலும் கூறவொண்ணாததோர் வியத்தகு நிலையனாக வுள்ளவன் அவன். கருத்தொத்த காதலர் மருவி நுகர்ந்த அக் காமவின்பம்போல் அவன் நிலையும் அவன் திருவடியின்பமும் நுகர்வாம் நுண்ணுணர்வால் உணர்வனவாகும். நொடிப்பாம் கருவியுணர்வான் உணர வாராவென்க. அதனால் பொய்யெனப் புகலும் கற்பனையுமன்று மெய்யெனக் காணுமாறு கலந்து நின்றருளினன். (8) 2904. முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே. (ப. இ.) பொருளின் வடிவினை முகக்கண் கொண்டு பார்க்க முடியும் ஆனால் அப்பொருளின் முடியாப் பண்பினை அகக்கண்ணாகிய அறிவுக் கண்ணால் மட்டும் காணுதல்கூடும். அறிவுக் கண்ணால் காணப்படும் அம்மெய்ப்பொருளை முகக்கண்ணால் காணலாம் என்று நாடியும் நவின்றும் வருவார் மூடராவர். அவர்களையே நோக்கி முகத்திற்கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் என்றனர். மேலும் முகக்கண் பொருள்களைக் காணுங்கால் பொருட்கண்ணாகும். புலமை பெறுங்கால் புலமைக் கண்ணாகும்; நலம்புரியுங்கால் நாகரிகக்கண்ணாகும்; குறிப்புணருங்கால் அறிவுக் கண்ணாகும்; சிவத்தினையுணரத் துணை செய்யுங்கால் புண்ணியக் கண்ணாகும். திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக்
1. அகளமாய். திருவுந்தியார், 1. 2. அகளமய. திருக்களிற்றுப்படியார், 4.
|