அதுபோல் திங்களின்கண்ணும் உளன். பேரறிவின்கண்ணும் உளன். அல்லாகிய ஆணவச் சார்பால் மாசடர்ந்த நிலம் அல்+நிலம் - அன்னிலம் எனப்பட்டது. அத்தகைய நிலத்தைக் காத்தருள்பவனும் சிவனே. (அ. சி.) பரிசறிந்து - நன்மை அறிந்து. அன்னிலம் - மயக்கமுடைய உலகினரை. பாரிக்குமாறு - காத்து அருளும்படி. (20) 2960. அந்தங் கடந்தும் அதுவது வாய்நிற்கும் பந்த வுலகினிற் கீழோர் 1பெரும்பொருள் தந்த வுலகெங்குந் தானே பராபரன் வந்து படைக்கின்ற மாண்பது வாகுமே. (ப. இ.) எல்லாப்பொருண் முடிவாகிய அந்தங்கடந்து நிற்கும் விழுமிய விழுப் பொருள் சிவபெருமான். அவன் அந்தங்கடந்து நின்றும் கலப்பால் அது வதுவாய் நிற்பன். பிணிப்புற்றுத் துணிவின்றி வருந்தும் இவ்வுலகினில் திருவருளால் பிணிப்பற்றுத் திருவடிக்கு மீளா ஆளாயினார் அடியாராவர். அவர், திருவடிக்கீழ் நீங்கா நினைவினராய் இருப்பதால் கீழோர் எனப்படுவர். அவர்க்கு என்றும் வேண்டுவ பிரிவின்றி நின்று நிரப்பும் பெரும்பொருள் சிவன். அவன்றன் திருவருட்டிருக் குறிப்பால் ஆயது இவ் வுலகம். இவ் வுலகெங்கும் நிறைந்திருக்கும் பெரும்பொருளும் அவனே. அவன், தானே சிவகுருவாக எழுந்தருளி வந்து அவ்வப்போது நன்னெறி நான்மை நல்லியல்சேர் நல்லாரை ஆட்கொண்டருள்வன். இவையனைத்தும் அவன்றன் திருவருள் மாண்பாகும். (அ. சி.) அந்தங்கடந்து - முடிவிறந்து. கீழோர் பெரும் பொருள் - தனக்கு அடியார் ஆனோருடைய வைப்பு. தந்த - தான் படைத்த. வந்து படைக்கின்ற - தான் குருவாய் வந்து நன்னெறியை அருளுகின்ற. (21) 2961. முத்தண்ட வீரண்ட மேமுடி யாயினும் அத்தன் உருவம் உலகே ழெனப்படும் அத்தன்பா தாளம் அளவுள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்துண 2ராரன்றே. (ப. இ.) வழிப்பேற்றின் நிலைக்களமாகிய முத்தியண்டம் பெருமை மிக்க அண்டமாகும். அதுவே அவன்றன் றிருமுடியாகும். ஆயினும் அச் சிவபெருமானின் திருவுருவம் ஏழுலகமுமாகும். அதுபற்றியே 'உலகமே உருவமாக' (1694) எனத் தமிழ்ப்பொருள் நூலும் ஓதுவதாயிற்று. அவன் திருவடி பாதாளம் ஏழினுக்கும் அப்பாற்பட்டது. உன்மத்தமாகவுள்ளார் அறிவும் செயலும் திரிபுற்று நெறியல்லா நெறிச் சென்றுழலும் நீரர். இத்தகைய தெளிவில்லாதவர் மேலோதியவற்றை விரும்பி உணரார் என்க. (அ. சி.) முத்தண்ட வீரண்டம் - சிவலோகம். மத்தர் - தெளிவு இல்லாதவர். (22)
1. எட்டாந். அப்பர், 4. 84 - 1. 2. பாதாளம். 8. திருவெம்பாவை, 11.
|