அவன் முதன்மையை யுணராது வஞ்சனையே உருவாகிய சலந்தரன், அவனுடன் போர்க்கு வந்தனன். சிவபெருமான் எல்லாத் தொழில்களையும் கருவியின்றிக் கருத்தளவானே செய்வன். ஆதலால் சலந்தரன் உடல் தடிதற் பொருட்டு நிலத்தே திருவடி விரலால் ஆழியமைத்தனன். அவ் வாழியே சலந்தரன் உடலைத் தடிந்ததென்க. தடிதல் - கொல்லுதல். ஆழி - சக்கரப்படை. (அவ்வாழிப்படையினையே திருமால் கண்ணிடந்து வழிபட்டுப் பெற்றனன் என்ப.) (4) 329. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன்1 என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே. (ப. இ.) சலந்தாங்கு செஞ்சடையினையும், ஆதியாகிய அன்னையையும் உடைய முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய தொல்லோன் சிவபெருமான். ஆருயிர் உய்தற் பொருட்டு அவ்வவ் வுயிர்களைச் சார்ந்த மும்மல காரியங்களை அவ் வுயிர்களால் செவ்வியுறச் செய்து அச் சிவபெருமான் திருவருள் நோக்கத்தால் சுட்டெரித்தருள்வன். இவ் வுண்மையினை எளியவர்கட்கு உணர்த்தும் பொருட்டு உருவகக் கதையாக உயர்ந்தோர் அமைத்து உருவகமெனவே கூறியுணர்த்தினர். பின்னுள்ளோர் அவ் வுண்மையினை மறந்து கதையை மெய்யாக்கிவிட்டனர். அத்தகையோர் அறியாமைக்கு இரங்கித் திருமூல நாயனார் அவர்களை மூடர்கள் எனக் கூறுகின்றனர். கூறி 'முப்புரமாவது மும்மல காரியம்' எனவும் ஓதுகின்றனர். அதனை மறுப்பாரை நோக்கிப் பின்னும் இரங்கி, 'அப்புரம் எரித்தமை யாரறிவாரே' என வினவுகின்றனர். ஏகாரம் எதிர்மறையாதலின் ஒருவரும் அறியாரென்பது பொருள். முப்புரம் - மூன்று கோட்டை அவை, இரும்பு வெள்ளி பொன்னாலாயவை. இவற்றின் நடுவுள்ளிருப்பது உயிர். அஃது அன்பறிவு ஆற்றல்களாகிய முப்பண்புகளோடு கூடியது. அம்முப்பண்புகளே உய்ந்த மூவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளன; ஏனை மடிந்தவர்கள் அனைவர்களும் தீய பண்புகளாகும். இரும்பு என்பது ஆணவ காரியத்தையும், வெள்ளி என்பது மாயா காரியத்ைதையும், பொன் என்பது வினையின் காரியத்தையும் குறிப்பனவாம். இவையே உண்மை. இது போன்று ஏனையவற்றையும் உருவகப் பண்புகளாகக் கொள்ளுவதே ஏற்புடைத்து. அன்பு அறிவு ஆற்றல்களாகிய முப்பண்புகளுள் அன்பு பின்னின்று குடமுழா முழக்குதற்கும், அறிவு முன்னின்று வலப்பக்கங் காவற்கும், ஆற்றல் இடப்பக்கங் காவற்கும் இயைபுடைத்தா மென்க. (5) 330. முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள் அத்தி யுரியர னாவ தறிகிலர்2 சத்தி கருதிய தாம்பல தேவரும் அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.
1. மூவெயில். ஆரூரர். 7 . 55 - 8. 2. அம்பனைய. சம்பந்தர், 3 . 77 - 3. " சொற்பிரிவி. சம்பந்தர், 3 . 78 - 2.
|