(ப. இ.) கூற்றுதைத்த சிவபெருமான் திருக்கோவில்களில் எல்லாம் நெறி நூலும் துறைநூலுமாகிய செந்தமிழ் வேத ஆகமங்களில் விளம்பியபடி நாள்வழிபாடு சிறப்புவழிபாடுகள் முட்டாது செய்தல் வேண்டும். செய்யத் தவறுமானால் உலகத்துக்கு அளவில்லாத கொடிய நோய்கள் பெருகும். வேண்டுங்காலத்து மழைபெய்யாது. சிறப்புடை மன்னரும் போர்வலி குன்றி மறமும் மானமும் இழந்து சீரழிவர். (3) 501. முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றுங் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னரு நந்தி எடுத்துரைத் தானே. (ப. இ.) கூற்றுதைத்த கடவுள் எட்டுவான் குணத்துச் சிவபெருமான் ஒருவனே. அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்கள் இரண்டு. ஒன்று ஆருயிர்கள், மற்றொன்று திருக்கோவில். இவ் விரண்டிடங்களும் விழுமிய முழுமுதற் சிவபெருமானை முறையே சென்று நினைவூட்டுவதும், நின்று நினைவூட்டுவதும் ஆகிய திருவடையாளங்களாம். இவற்றின் வழியாக இவற்றை வழிபடும் மெய்யன்பினர்தம் தூய திருவுள்ளத்துச் சிவன் எழுந்தருள்வன். இவ் விரண்டிடங்களிலும் செய்யும் பூசை 'முன்னவனார் கோயில் பூசையாகும்.' அதற்கு முட்டு ஏற்பட்டால் ஆளும் வேந்தர்க்கு நாளும் தீங்குண்டாகும். வேண்டுங்காலத்து மழை பெய்யாது. உலகத்தில் கன்னங்களவு அளவில்லாமல் பெருகும். இங்ஙனம் நந்தியருள் செய்தனன். வாரி - வருவாய்; மழை. கன்னம் - களவெடுப்பதற்காகச் சுவரில் தோண்டுங்கருவி மிகுத்திடும். அளவின்றிப் பெருகும். காசினிக்கு (என்னும் பாடத்திற்கு) - உலகத்தில் வாழும் மக்களுக்கு (ஆகுபெயர்). முட்டிடின் - சிறப்பொடு பூசனை செய்யத் தடைப்பட்டு நடவாமற் போனால். (4) 502. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. (ப. இ.) இயற்கைச் செந்தமிழ் அந்தணாளர் பார்ப்பார் எனப்படுவர். திருவடியே குறிக்கோளாக மீளா அடிமையாய் வாழ்வதே பெரும்பேற்றின்பாக அகமும் புறமும் ஒத்துப் பார்ப்பார் ஒழுக்கமிக்க விழுத்திணைப் பார்ப்பாராவர். அவர்களே பூசைக்கு உரியவர். தமிழ் நாட்டில் வெளியிலிருந்து வருவாரும் உயர்நிலைப் பெயரை மயலாய் வைத்துக்கொள்வர். அவர்கள் பேர்கொண்ட பார்ப்பார் எனப்படுவர். அவர்கள் திருக்கோவில் பூசைசெய்யும் தக்கவராகார். அவர்களைக் கொண்டு பூசைசெய்வித்தால் தீமைகளைப் போர் செய்தகற்றும் வேந்தர்க்கு நீங்காக் கொடுநோய்கள் வீங்கும். முறைசேர் திருநாட்டில் வற்கடமாகிய பஞ்சமும் உண்டாகும். (அ. சி.) பேர்கொண்ட பார்ப்பான் - ஆரியப் பார்ப்பார். (5)
|