21. சிவநிந்தை 509. தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே அளிவுறு வாரம ராபதி நாடி எளியனென் றீசனை நீசர் இகழில் கிளியொன்று பூஞையிற் கீழது வாகுமே.1 (ப. இ.) திருவடி யுணர்வுடையார் நல் உள்ளத்தினுள்ளே சிறந்து விளங்கும் சிவபெருமானை விண்ணவர் முதலியோர் தொழுது அவன் திருவருளைப் பெறுவர். எளியனென் ...வாகுமே - திருவடியுணர்விலாக் கீழோர் சிவபெருமானை மூவரொடும் ஒருவனாக எளிமையாக எண்ணிப் புறக்கணிக்கின்றனர். அதனால் அவர்கள் பிறவித்துன்பத்தில் உழல்கின்றனர். அவர்கள் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளிபோலாகின்றது. (அ. சி.) கீழது - கிழிபட்டது. (1) 510. முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத் தளிந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே. (ப. இ.) கன்மனமுடைய வானவர் தானவரெல்லாம் விழுமிய முழுமதற் சிவபெருமானைக் கெழுமித் தொழாது 'பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றனர்.' சிறந்த திருவடியமிழ்தை யருளும் சிவபெருமானைத் தளிர் கொண்டு வழிபட்டாரே அப் பேரின்பத்தைத் தாங்கும் பெற்றியராவர். தளிந்தவர் - தளிர்கொண்டு வழிபட்டவர். விளிந்தவர் - மீண்டும் பிறக்க இறந்தவர். அளிந்து - கனிந்து, தாங்குதல் - அணைதல். (அ. சி.) முளிந்தவர் - வாடிய சரீரத்தை உடையவர். தளிந்தவர் - அடங்கியவர். (2) 511. அப்பகை யாலே அசுரருந் தேவரும் நற்பகை செய்து நடுவே முடிந்தனர் எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப் பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.2 (ப. இ.) அறியாமையால் விளையும் செருக்காகிய பகையினாலே அசுரரும் தேவரும் பிறப்புப் பகைவராய்ப் பெரும்போர் செய்து மாண்டழிந்தனர். இறைவனைச் செந்தமிழ் மறையால் வழிபடுபவர் எப்பகையும் கொள்ளார், விள்ளார், சிவனே அவர்தம் பகையினை நீக்கியருள்வன். காவலர் மேவலரை நீக்கித் தாவில் குடிகளைத் தப்பாமற் காக்கும் வாய்மை
1. என அப்பர், 5. 97 - 9 2. உடைத்தம். திருக்குறள், 873 " பகை என்னும் " 871
|