576. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் முன்னுறு கோடி உறுகதி பேசிடில் என்ன மாயம் இடிகரை நிற்குமே. (ப. இ.) தொன்றுதொட்டுப் பிறந்திறந் துழல்வாருள் முன்னம் பிறந்தவர் அனைவரும் இறந்தொழிந்து 'தோற்றமுண்டேல் மரணமுண்டு துயர மனைவாழ்கை' என்பதனை நிலைநாட்டினர். இவ் வறிவுரை யருண்மொழி திருவடிப் பேற்றைக் கனவினும் கருதாது நனவினும் கனவினும் மீண்டும் மீண்டும் பிறந்து மனைவாழ்க்கையிற் சிறந்து வாழ வேண்டுமென்னும் புல்லறிவாளர்க்கே புகன்றருளப்பட்டதாகும். நல்லறிவாளர் மனைவாழ்க்கைக்கண் நின்றே திருவடிப்பேறு பெறுவர். அவர்கள் மீண்டும் பிறக்க மறந்தும் வேண்டார். அவர்களை நோக்கின் மனை வாழ்க்கை புனையும் புணையாகும். பின்பிறந்து வந்தார்கள் இறவார் என்பதற்கு ஏதும் அளவையுண்டா? ஆவிபிரிந்தார் மேவியுறும் நிலை அளவில்லன. அந் நிலைகளையும் பேசிடில் அவையனைத்தும் நிலை பேறின்மையாக முடியும். இடிகரைபோன்ற வுடல் யாண்டும் நிலை பெறாது. (அ. சி.) முன்னமே ...முடிந்தனர் - இதற்குமுன் பலபேர் இறந்தொழிந்தார்கள். பின் ...பிரமாணம் - பின்னால் வருபவர் இறக்கமாட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை. இடிகரை - அழியும் தேகம். (9) 577. அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப் பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே.1 (ப. இ.) ஆற்றுவெள்ளம் கரையினை அரித்துப் பாழாக்குவது போன்று புலப்பொருள்வெள்ளம் உடம்பினை அரித்துப் பாழாக்குகின்றது. மெய்கள் ஒன்றினின்று ஒன்று தோன்றியதுபோல் முறையே ஒடுங்கும். அவ் வொடுங்குமுறை உணர்வினில் உணர உண்மை புலனாம். உண்மையாவது உலகம் நிலையாது; உடையானாகிய சிவன் நிலைப்பன். இவை புலனாகவே உலகப்பற்று அறும். உடலைப் பூதத்தில் ஒடுக்குதல் வேண்டும். பூதத்தை எண்ண முதலிய அகப்புறக்கலன்களில் ஒடுக்குதல் வேண்டும். சொல்லப்பட்ட மனாதிகளை மூலப்பகுதியில் ஒடுக்குதல் வேண்டும். ஆருயிரைப் பேருயிராகிய சிவத்தில் ஒடுக்குதல் வேண்டும். இம்முறையான் நினைவதே பொறைநிலையாகிய தாரணை எனப்படும். சத்தாதி - சுவை முதலிய பூதமுதல்கள். போந்து - ஒடுங்கி. சத்தாதி - குணம் முதலிய மாயைகள். தற்பரம் - தானே மேல்; சிவபெருமான். (அ. சி.) அரித்த உடல் - ஐம்புலன்களால் அவதிப்பட்ட உடல். தாரணை - மண்முதல் தத்துவங்களை ஒன்றினொன்று ஒடுக்கிச் சிவத்தைச் சிந்தித்தலேயாகும். அஃதாவது, பூதங்கள் ஐந்தைப் புலன்களில் ஒடுக்கி, புலன்களை அந்தக்கரணம் நான்கில் ஒடுக்கி, அந்தக்கரணங்களை மாயையில் ஒடுக்கி, மாயையை ஆன்மாவில் ஆன்மாவைச் சிவத்தில் ஒடுக்கல். (10)
1. தத்துவ. சிவஞானசித்தியார், 2. 3 - 22.
|