செல்வமும் இங்ஙனம் ஒரோவொன்று எவ்வெட்டாய். விரியான் அறுபத்துநான்காம் எனக்கொள்க" சிவஞானபோதம், 2 - 2. சிவஞான முனிவரனார் பேருரை. எழுத்திலக்கண முதலாக நிலை (அவத்தை)யிற் செலுத்துதல் ஈறாகக் கூறப்பட்ட அறுபத்துநாலு சித்திகளும் எனக் கூறுவாரும் உளர். தானாந்திரிபுரைசத்தி - தானாகவே யிருக்கின்ற முப்புரச்செல்வி. நெய்வோரும் தைப்போரும் நோந்த பலதரல்போல், ஐயனருள் சித்தர்க்கும் ஆரமரர் - கையசுரர், பேயர் முதலோர்க்கும் பெட்ப படைத்தளிக்கும், ஆயதனால் வேண்டுவவாம் அங்கு. (31) அணிமா (நுண்மை) 651. எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப் பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால் இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே. (ப. இ.) எழல்பரம் - அன்பறிவாற்றல்கள் மூன்றும் இயல்பாகவே விளங்கும் முழுமுதற்சிவம். (அன்பறிவாற்றல் - இச்சாஞானக்கிரியை). கைகூட - இடையறா நினைப்பால் மிக்குவிளங்க. பட்டவர் சித்தர் - கைகூடிய அத்தகையவரே மேலான சித்தராவர். பரலோகம் - சிவவுலகம். இட்டம்....பரகாட்சி - விரும்பப்படும் பொருளாகிய சிவத்தினுள் ஒடுங்குதல் சிவக்காட்சி. இறுக்கல் - ஒடுங்குதல், எட்டு வரப்பும் - எண்பேறுகளும், இடந்தானின் றெட்டும்: நின்ற இடந்தான் எட்டும் - இருக்கும் இடத்தே எளிதாக வந்து எய்தும். (32) 652. மந்தர மேறு மதிபானு வைமாற்றிக் கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத் தந்தின்றி நற்காய மியலோகஞ் சார்வாகும் அந்த வுலகம் அணிமாதி யாமே. (ப. இ.) மந்தரம் - புருவநடு; மேரு ஏறும் மதி பானுவை மாற்ற - மேலே ஏறுகின்ற திங்கள் ஞாயிறாகிய இடப்பால் வலப்பால் உயிர்ப்பை மேலது கீழது கீழது மேலதாய் மாற்றிவைக்க. குழியில் - அமிழ்த ஊற்றினால். கந்தாய் - அடித்த முளைபோல் அசைவற்றிருக்க. தந்து: தந்தது என்பதன் திரிபு. இன்றி - தந்தபடியேயல்லாமல். நற்காயம் - யோகப்பயிற்சியால் சிறந்து விளங்கும் உடல். இவை நுண்மையாகிய அணிமா என்னும் சித்தியால் கிடைக்கும். (அ. சி.) கந்து - அடித்த முளை. குழி...ர்க்கு - அமுத ஊற்றினாலே குற்றம் அற்று இருக்க வல்லார்க்கு. (33) 653. முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில் அணிந்த அணிமாகை தானாம் இவனுந் தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.
|