679. முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன் முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின் முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய் முன்னுறு வாயு முடிவகை யாமே. (ப. இ.) திருவருள் ஆற்றலுடன் மேலோங்கும் உயிர்ப்பு ஐம்பத்தாறு என்னும் கால அளவையைக்கொண்டு முடியும் என்க. (60) 680. ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன் ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில் ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பதொ டொன்பதும் ஆய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே. (ப. இ.) உயிர்ப்பின் அளவினைக் கூறுங்கால் அஃது ஐஞ்ஞூற்று முப்பத்தொன்பதாகும். இவை ஒப்பில்லாத திருவருள் முதல்வி தன்னுடன் வரும். (61) 681. இருநிதி யாகிய எந்தை யிடத்து இருநிதி வாயு இயங்கு நெறியில் இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய் இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.1 (ப. இ.) சங்கம் என்னும் எண்ணும் தாமரை என்னும் எண்ணும் கொண்டுள்ள செல்வங்களினும் மிக்குள்ளதாகிய உயிர்ப்பு, 'செல்வன் கழலேத்தும் செல்வமே' மிக்க சிவபெருமான் ஆணையின்வழிச் செல்வது. அவ் வுயிர்ப்பு இயங்கும் சிறந்த நாடிகள் இருநூற்று முப்பத்துமூன்று. அவ் வுயிர்ப்பினை இயக்கும் எழுத்து ஐந்து. எழுத்து ஐந்தும் முறையே நாதம், விந்து, அகர உகர மகரங்கள். நாதத்தை முதல் ஒலி எனவும், விந்துவை ஒலிமுதல் எனவும் கூறுவர். இவற்றை ஒலிவடிவம் வரிவடிவம் எனக் கூறுதலுமாம். (62) 682. எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால் எழுகின்ற வாயு இடமது சொல்லில் எழுநூற் நிருபத்தொன் பானது நாலாய் எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே. (ப. இ.) திருவருளாற்றலால் தோன்றுகின்ற உயிர்ப்பின்நாடிகள் எழுநூற்றிருபத்தொன்பது. அது பலவாறாய் விரிந்து மேற்பட்டு ஒளி மண்டிலங்களுடன் ஒன்றியிருந்தது. நாலாய் - பலவாறாய். (63) 683. ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும் ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.
1. சங்கநிதி, அப்பர், 6. 95 - 10.
|