(ப. இ.) உயிர்ப்பினர்க்கு வெளியில் புறப்பட்டுச்சென்று அழிகின்ற நால்விரல் உயிர்ப்பையும் அடக்கின், அஃது அண்ணாக்கு மேனோக்கி எழுந்து மூக்குவழியினை அடைக்கும் நன்மையினைத் தரும். பரவெளி ஆயிர இதழ்த்தாமரைமேல் விளங்கும் திருவடியுணர்வு கைகூடும். அவ்வுணர்வு கைகூடியவர் செந்நெறித் தலைவருமாவர். போதகம் - திருவடியுணர்வு. (3) 753. தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை தலைவ னிடம்வல மாயிடில் தையல் தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில் தலைவ னிடம்வலந் தன்வழி நூறே. (ப. இ.) தலைவனருளால் உயிர்ப்பினை இடமூக்கு வலமூக்கு வழியாகச் செலுத்தவேண்டிய முறைப்படி செலுத்திப் பயிற்சிசெய்யின் நெடுநாள் வாழலாம். அங்ஙனம் செய்வார் அரியர். அப் பயிற்சி செய்வார்க்குத் திருவடி கைகூடும். இம்முறைப் பயிற்சி நாடொறும் ஐவைந்து நாழிகைகள் பயிலின் அகவையும் நூறாகும். அஞ்சில் - ஐந்து நாழிகையில். உயிர்ப்பும் ஐவிரலின் அளவினதாகும். (அ. சி.) இடம் வலம் சாதிப்பார் - பிராணாயாமத்தைச் சரியாய்ச் செய்து முடிப்பவர். (4) 754. ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந் தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில் ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந் தேறியே நின்று தெளியிவ் வகையே. (ப. இ.) அவ் வுயிர்ப்பு ஆறு விரலளவாக ஓடினால் அகவை எண்பதாகும். ஏழானால் அறுபதாண்டு வாழ்வர். (5) 755. இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில் அவ்வகை 1ஐம்பதே யென்ன அறியலாஞ் செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின் முவ்வகை யாமது முப்பத்து மூன்றே. (ப. இ.) அவ் வுயிர்ப்பு எண்விரலளவாக ஓடினால் நாற்பத்தைந்தாண்டு வாழ்வர். ஒன்பது விரலளவாக ஓடினால் முப்பத்து மூன்றாண்டு வாழ்வர். (6) 756. மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில் 2எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும் ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற் பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.
(பாடம்) 1. யையொன்ப தேயென்ன; யொன்பதே யென்ன. 2. எண்மூன்றி னாலும்.
|