படும் அறிவில் அறிவாம் (ஞானத்தின் ஞானம்) திருவடியுணர்வை உணர்வுட் கொண்டால், அவ்வுணர்வு உள்ளத்தினிடத்து அழகு மிக்க ஒளிவடிவாகும். உள்ளமும் அழகுநிறை உள்ளமாகும். இவ்வுள்ளம் அமைந்தோர்க்கு உலகமும் உலகியல் துய்ப்பும் பகலிற் காணப்படும் பொருள்போல் நன்றாக விளங்கும். கண்ணி - கண்ணையுடையாள்; திருவருள். பார் - உலம். ஆர்உலகம் - உலகியல் துய்ப்பு. (அ. சி.) கடைஞானம் - முடிந்த ஞானம். (25) 804. முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும் நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத் தன்னெழு கோயில் தலைவனு மாமே.1 (ப. இ.) விளங்கித் தோன்றும் கொப்பூழின்கீழ்ப் பன்னிரண்டு விரல் அளவினதாகிய மூலத்திடத்து மறைகள் முதற்கண் ஓதும் ஓமொழியுண்டாம். உடம்பின் நடுவிடமாகிய நெஞ்சிடத்து ஒளிப்பிழம்பு தோன்றும். நன்மையாகத் தோன்றும் அவ் வொளிப்பிழம்பினிடத்து நல்லக விளக்காகிய 'நமச்சிவாய ஐந்தெழுத்தை' இடையறாது ஓதி (உன்னடியேன் செய்பணிகள் உன்தொண்டே உன்னருளே, உன்னடிக்கே ஒப்புவித்தேன்.) ஒப்புவித்தல் வேண்டும். ஒப்புவிக்கவே தலைவனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாக. அவ்வுடல் அமையும். அதுவே கேசரியோகத்தின் பயனாம். (26)
19. பரியங்க யோகம் 805. பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திக் காயக் குழலி கலவி யொடுங்கலந்து ஊசித் துளையுறத் தூங்காது போகமே. (ப. இ.) அகத்தவமாகிய யோகப்பயிற்சியைக் கைவிட்டு இன்பத் துறையாகிய போகப் பயிற்சியிற் சென்றால் அஃது ஒரு ஞான்றும் நிறைவுறாது. மனத்தை மாற்றும் பெண்கள், கூந்தலுக்குப் பூசத் தகுந்த மயிர்ச்சாந்து முதலியன பூசியும், அகிற்கட்டை முதலியவற்றால் அவற்றை உலரவைத்தும் அவற்றால் நறுமணம் என்றும் மாறாத கூந்தலையும், மாலை சூடிய குழல் போன்ற இனிய மொழியையும் உடையவராய் இருப்பர். அப்பெண், விரும்புவார் உள்ளத்தை வெதுப்புவள். அதனால் ஏற்படும் நிலையில் இன்பம் ஊசியின் தொளை போன்று சிறியதாகும். ஆயினும் தளர்வு ஏற்படாமல் மயக்கும். காயக் குழலி; காய் + அக் குழலி. காய்தல் - வெதுப்புதல்.
1. யாதே அப்பர், 5. 50 - 6. " அன்றே. 8. குழைத்தபத்து, 7. " அஞ்செழுத். 12. சிறப்புலி நாயனார், 5.
|