4
 

(ப. இ.)சிவனுடன் ஒப்பான ஒரு தெய்வத்தை ஆண்டுத் தேடினும் காண்டல் இல்லை. அவனுடன் ஒப்பாரை ஈண்டுங் காண்டல் இல்லை. எனவே, யாண்டும் யாவரும் அவனுக்குத் தாழ்ந்தவரே. அனைத்துலகங்களுக்கு அப்பாற்பட்டுப் பொன்போல் விளங்காநின்ற பின்னுதலையுடை தீவண்ணச் செஞ்சடையுடன் திகழ்கின்றான். மெய்யன்பர்களின் அன்பால் விளங்கும் நெஞ்சத் தாமரையைத் துய்ய வைப்பாகக் கொண்டு உறைகின்றனன் சிவன்.

(அ. சி.)தவனம் - தீ - (செந்நிறம்). புவனம் - அண்டங்கள். சிவன் - சீவனோடு சேர்ந்துள்ளவன்; மங்களகரமானவன்; செந்நிறத்தவன்.

(4)

5. அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர் 1புகு மாறறி யேனே.

(ப. இ.)அச் சிவபெருமான் திருவாணை ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் முத்திறப்புணர்ப்பானும் ஆருயிர்களைப் பொருந்தும். அங்ஙனம் பொருந்தாவிடின் அமரர். எவர்க்கும் வாழ்வில்லை. அவன் அருள் துணையின்றிச் செய்யப்படும் அருந்தவங்கள் ஏதும் இல்லை. அவனருள் இல்லாமல் அயன், அரி, அரன் என்னும் மூவரால் நடக்கக்கூடியது ஒன்றும் இல்லை. அவன் திருவருளில்லாமல் வானோர்க்கு உயர்ந்த உலகமாகிய பேரின்பத் திருவூர்புகும்வழி ஒருவராலும் உணரவொண்ணா தென்க.

அவன்: சேய்மைச் சுட்டு; பண்டறிசுட்டுமாம். சேய்மைச் சுட்டு உண்மையும், பண்டறிசுட்டுப் பொதுவுமாம்; பொது ஈண்டுச் சார்பு.

(அ. சி.)ஊர் - முத்தி நகர். மூவர் - அயன், அரி, அரண் (உருத்திரன்). அமரர் - மரியாதவர்கள்; இறவாதவர்கள்.

(5)

6. முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப்2பாகின்ற போதகத் தானே.

(ப. இ.)ஒவ்வொரு தொழிலே உடைய அயன் அரி அரன் என்னும் மூவரும் அவ்வத் தொழில் ஒன்றேபற்றி தம்முள் ஒப்பாவர். அம் மூவர்க்கும் முழுமுதலாய்ச் சிறந்தோனாய் என்றும் காணப்படுபவன் சிவன். மூப்பு - சிறப்பு. அச் சிவன் தன்னை யொப்பாக ஒரு பொருளுமில்லாத தனிமுதல்வன். அவனை விட்டு நீங்காது ஒட்டியுறைவோன் என்னுங் கருத்தால் அப்பன் என்று அன்பாய்ச் கூறின், அப்பனுமாவன். அவன் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையின் உன்னிடத்தான். அந்நெஞ்சத்தாமரையின்கண் பொன்னொத்துத் திகழ்கின்றனன். பொன் : பொதுப்பெயர்; அஃது இரும்பு, பொன் என்னும் இரண்டினையும் குறிக்கும் ஆருயிரின், நெஞ்சம் ஆணவச் சார்பால் இரும்பொக்கும்; அருட்சார்பால் பொன்னொக்கும்.


1. இருடரு அப்பர், 4. 92 - 5.

2. மின்னும் (பெரும்பொருள் விளக்கம்) தொல் பொ 90. மேற்கொள்.