1009 .பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைந்து காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும் பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே. (ப. இ.) அம்மையப்பராய் விளங்கும் சிவபெருமான் ஐந்து திருமுகங்களுடன் விளங்குங்கால் அவனை விட்டுவிலகாத அம்மையும் ஐந்து திருமுகங்களுடன் விளங்குவள். இவ் இருவர்க்கும் திருவுடம்பு ஓருடம்பாய்த் திகழும். அப்பொழுது முகம் பத்து, கண் முப்பது. செவி இருபது, கை இருபது, திருமுடி இருபது, திருவடி இரண்டு என்னும் எண்களை இத் திருப்பாட்டுக் குறிக்கின்றது. இறுதியிலுள்ள இருபத்தஞ்சே என்பதை இருபது தஞ்சே எனப் பிரித்தல் வேண்டும். ஆருயிர்கட்கு இத் திருவுருவே தஞ்ச மென்க. தஞ்சே - தஞ்சம். இருபது - இருவகை ஐம்முகம். (அ. சி.) பார்ப்பதி - மனோன்மணி. பாகம் - சதாசிவன். (19) 1010 .அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும் மஞ்சிட்ட குண்ட மலர்ந்தங் கிருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே. (ப. இ.) ஐந்து திருமுகங்களோடு கூடிய அருளோன் நிலையாகிய சதாசிவத் திருமேனியும், அதன் விரிவாகிய இருபத்தைந்து என்னும் ஏனைச் சிவத் திருவுருவங்களும், அழகு மிக்கதாகிய ஓமகுண்டங்களும் மலர்ந்துள்ளன. அதன் கண் எழும்பரஞ்சுடர் செம்பஞ்சு போலும் ஒளிமிக்கதாகிய பேரொளிப் பிழம்பாகும். அத்தகைய அருமையான ஒளிப்பிழம்பினைக் கூடுவதே வீடுபேறாகும். (அ. சி.) அஞ்சிட்ட கோலம் - சதாசிவ உருவம். ஐயைந்து - இருபத்தைந்து ஈச உருவங்கள். கொஞ்சிட்ட - அருமையான. வன்னி - சோதி. (20) 1011 .முத்திநற் சோதி முழுச்சுட ராயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய்ச் செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே. (ப. இ.) வீடுபேற்றை அருள்பவனும், என்றும் ஒருபடித்தாய பேரொளிப் பிழம்பாயுள்ளவனுமாய சிவன் ஐயந்திரிபறச் செந்தமிழ்த் திருமுறையும் சித்தாந்தமும் ஓதியுணர்ந்து ஒழுகும் மெய்யடியார் உள்ளத்துள்மிக்கு விளங்குவன். உற்ற பற்றறும் வழிவகைகள் யாதென்று எண்ணி அதன்வழி ஒழுகுதல் வேண்டும். அவ் வழியாவது செய்யுஞ் செயலெல்லாம் சிவன் செயல் என்னும் உண்மை கண்டு நடத்தல். அது, வழி நடப்பார் வெளிச்சத்தின் துணையாக நடக்கின்றோம் என்று எண்ணுவதை யொக்கும். இறைவனை மறவாது காமம் முதலிய குற்றங் கடிந்திருந்தவர் அவன் திருவடியிற் கலந்து இன்புறுவர்.
|