1119 .நடந்தது வம்மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப் படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே தொடர்ந்தது உள்வழிச் சோதி யடுத்தே. (ப. இ.) திருவருளால் நடந்துவரும் உலகத்து இதழ் ஒன்பது கொண்ட தாமரையுளது. அதன்கண் வீற்றிருப்பார் ஒன்பதின் ஆற்றலர்கள். இவரை நவ (878, 893) சத்தி என்பர். அகத் தாமரை ஆகிய நிலைக்களங்களில் நிகழும் நிகழ்ச்சிகள் திருவருள் ஆணைவழி நிகழ்வன. உச்சித் தொளைவழி ஒள்ளொளியைத் தொடர்வதுமாகும். 'சோதி உள்வழி' எனக்கொண்டு சிவனிருக்குமிடம் எனினுமாம். (19) 1120 .அடுக்குந் தாமரை ஆதி யிருப்பிடம் எடுக்குந் தாமரை இல்லகத் துள்ளது மடுக்குந் தாமரை மத்தகத் தேசெல முடுக்குந் தாமரை முச்சது ரத்தே. (ப. இ.) ஆருயிரை அடுத்திருக்கும் நெஞ்சத்தாமரை (அனாகதம்) ஆதியையுடைய சிவபெருமானின் உறைவிடம். நெஞ்சினின்றும் மேலுயர்த்தும் நிலைக்களம் இல்லகமாகிய மிடறாகும். உயிரமிழ்தாகிய வித்து மடுக்கும் தாமரை புருவநடுவாகும். அப் புருவநடுவிலே ஆருயிரைச் செல்லுமாறு முடுக்கும் தாமரை மூலமாகும். மூலம் - மூலாதாரம். இது முச்சதுரம் உடையது. சதுரம் எனினும் சதிரம் எனினும் ஒன்றே. (அ. சி.) அடுக்குந் தாமரை - ஆஞ்ஞை எடுக்குந் தாமரை - விசுத்தி. மடுக்குந் தாமரை - அனாகதம். முடுக்குந் தாமரை - மணிபூரகம் (Solar pluxes). (20) 1121 .முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர் எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற எச்சது ரத்தும் இருந்தனள் தானே. (ப. இ.) முச்சதுரமாகிய மூலத்திடத்து எழுந்த சுடர் எங்கும் இடம்பெற்று விளங்கும்படி செல்லவும், அழகிய பெருமை மிக்க இவ் வொளி எய்தும்படியும் எல்லா இடங்களிலும் திருவருளம்மை நிறைந்திருந்தனள். (அ. சி.) முச்...சுடர் - மணிபூரகத்தினின்றுமே எவ்விடத்துக்கும் சத்தி பரவுதலால் முளைச்சுடர் எனப்பட்டது. எச் சதுரம் - எல்லா இடத்திலும். கைக் சதுரம் - பிரமரந்திரம். (21) 1122 .இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப் பரந்தன வாயு திசைதிசை தோறுங் குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.
|