461
 

திருவருள் திருவடிப்பேற்றை அப்பொழுது காட்டாது மறைத்தலின் மறைப்பாற்றல் எனத் தக்கதென்றனர். பரவாதனை - மேற்றடை; மேனிலையைக் காட்டாத தடை. பரம் - மேல். வாதனை - தடை.

(அ. சி.) ஆறு - ஆறாதாரம். எட்டு - எட்டுயோகங்கள். ஆறு - நிராதாரம் ஆறு. ஈரேழு - பதினாலு உலகங்கள்.

(20)

1151. தக்க பராவித்தை தானிரு பானேழில்
தக்கெழு மோருத் திரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத் திரையாளே.

(ப. இ.) மிகவும் சிறந்த திருவருளின் கலையைப் பயிலுதற்கு ஏற்றநாள் முக்கூட்டாகிய பரணிநாளாகும். பண்டைக் காலத்தில் கார்த்திகையை முதல்நாளாகக் கொண்டு எண்ணியுள்ளார்கள். அதனால் பரணிநாள் இருபத்தேழாம் நாளாயிற்று அத் திருவருட் கலையைப் பயில்வார்க்கு ஒப்பில்லாத விடைபகரவே வெளிப்பட்டுத் தோன்றுவள். அவள் எட்டுச் சத்திகளையுடையவள். அவள் வெள்ளிய நிறமுடையவள். அவளே மூன்று திருக்கண்களையு முடையவள். அவளே அமைந்த காரணத்துடன் அரிய பழைமையான முத்திரையையும் உடையவள். உத்திரம் - விடை. சொல்லச் சொல்ல: அடுக்கு. கதை - காரணம். உருத்திரமெனக்கொண்டு திருவெம்பாவைக்கண் எண்பேராற்றல் வருமாறு கூறுதலை ஒத்துக் காண்க. நாள் - நட்சத்திரம்.

(அ. சி.) இருபானேழு - இருபத்தேழு வயதிற்குள். உருத்திரம் - உடல் உறுதியை அடையும் அஞ்செழுத்து மந்திரம் (உரு - உடல்; திரம் - உறுதி.)

(21)

1152. முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாயல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.

(ப. இ.) அன்பு அறிவு ஆற்றல்களை விளக்கும் மூவகை முத்திரைகளுள் முடிந்த முத்திரையாகிய அறிவு முத்திரையுடையவள் அருளம்மை. தத்துவமாகிய உலகுடல்களுடன் கலப்பால் ஒன்றாய், பொருள் தன்மையால் வேறாய், உதவுதலால் உடனாய் எல்லாமாயிருப்பவளும் அவளே. அவள் அருள் செய்தற்பொருட்டுச் சிவபெருமானுக்குத் திருமேனியாகவுடையவள். நடப்பாற்றலாகிய ஆதிசத்தியும், வனப்பாற்றலாகிய இன்பச் சத்தியும் சிவனைவிட்டுப் பிரிந்து நில்லாதவர். அதனால் அவ்விருவரும் சிவனை மணக்கின்றனர் என்றனர். கொங்கு: மணக்கின்றனர்.

(அ. சி.) கொங்கு - வாசனை, நறுமணம்.

(22)

1153. கொங்கீன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள்
அங்குச பாச மெனுமகி லங்கனி
தங்கு மவள்மனை தானறி வாயே.