(ப. இ.) திருவடியுணர்வு மறவா நல்லோராகிய சிவஞானிகள் நிலவுலகில் தோன்றும்பொழுது புண்ணிய பாவமாகிய இருவினைகளையும் அறிவர். அத்தகைய நல்லோர் நற்றுணையால் பிறப்புக்கு வித்தா புண்ணிய பாவ மிரண்டனையும் வேரறுத்து, முப்பத்தாறு மெய்யும் கடந்து அப்பாலுள்ள அருள்வெளியே செப்பமுற விளங்கும் அண்ணலாகிய சிவபெருமான் இடம். அதுவே நாம் அடைய வேண்டிய நல்லிடம் என்று உணர்ந்துகொள்வீர். (அ. சி.) இம் மந்திரம் புண்ணியத்தையும் பாவத்தையும் இரண்டையும் ஒழிக்கவேண்டு மென்றது. அஃதாவது இரண்டிலும் பற்றற இருக்கும் நிலை. (3) 1621. முன்னின் றருளு முடிகின்ற காலத்து நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும் பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும் முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. (ப. இ.) நற்றவம் நிறைவுறுங் காலத்துச் சிவபெருமான் எதிர் தோன்றி அருள்புரிவன். நன்மை நிறைந்த இவ் வுலகத்தில் அனைத்துயிர்க்கும் தினைத்துணையும் வேற்றுமையின்றிச் சிவன் நடுவாய் நின்றருள்வன். நடுவாய் - பொதுவாய் நிற்றல்; என்பது உயிர்க்குயிராய் நிற்றலெனினுமாம். எஞ்சுவினைக்கீடாக வரக்கடவ பிறவிகளைப் பின் நின்று நீக்கியருள்வன். பின்னின்று: பின்னி நின்று; புணர்ந்து நின்று நினைப்பின் வீற்றிருந்தருள்வன். அதனால் அடியேன் அவனையே நினைப்பேன். அதனால் அவன் வீடுபேற்றையும் தந்தருள்வன். முன் - நினைப்பு பின்னி என்பது பின் எனக் கடைக் குறைந்தது. (அ. சி.) முன்னின்று அருளும் - எதிர்தோன்றி அருளுவன். முடிகின்ற காலத்து - தவம் முற்றுப்பெற்ற காலத்து. நன்னின்று......நிற்கும் நன்மார்க்கத்தில் நிற்கும் உயிர்களுக்கு அவ் வுயிர்களின் ஊடே சிவன் சிறந்து விளங்குவான். (4) 1622. சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர் சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர் சிவனரு ளால்வினை சேரகி லாமை சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே. (ப. இ.) சிவபெருமான் திருவருளால் உடல்மெய்யாகிய இருபத்து நான்களுள் தங்கிப் படைத்தல், காத்தல், துடைத்தல், விண்ணாடு புரத்தல் முதலிய இறைமைத் தொழில்களை ஆருயிர்கள் சிவனாராணையால் புரியும். அப்பொழுது அவ் வுயிர்கள் தேவர்கள் எனப்படும். இத் தேவர்களையும் இயக்கும் அருள்பெற்ற வுயிர்கள் உணர்த்துமெய்யாகிய முப்பத்திரண்டாம் மெய்யின்கண் தங்கி அயன், அரி, அரன், வேந்தன் என்னும் பெயர்களையே பூண்டு நிற்கும். முப்பத்திரண்டாம் மெய் ஆசான் மெய் அல்லது சுத்தவித்தை எனப்படும். மெய் - தத்துவம். இவர்களும் தேவர்கள் என அழைக்கப்பெறுவர். இந் நிலவுலகத்துச் சிவனருளால் வாழ்வாங்கு வாழும் வாய்மையர்களும் தேவர் எனப் பெறுவர் சிவபெருமான் திருவருளால் எஞ்சுவினை, ஏன்றவினை, ஏறு வினை என்னும் முத்திற
|