664
 

(ப. இ .) கருவறையின்மேல் புறந்தோன்றும் மேன்முடி உச்சியாகிய விமானம் தூய்மையும் பருமையும் வாய்ந்த சிவக்குறியாகும். சிவக்குறி - சிவலிங்கம். அவ் விமானத்தின்கீழ் அகத்தே கருவறையில் விளங்கும் அருளோன் ஆகிய சதாசிவன் நுண்ணிய சிவக்குறியாவன். பரந்த பலிபீடம், ஆனேறு இவையும் சிவலிங்கமென அழைக்கப்பெறும். பத்திரம் - ஆனேறு, சிறந்ததும் உறுதியளிப்பதுமாகிய திருக்கோவிலின் மெய்ம்மை நினைவார்க்கு இவ் வுண்மை செம்மையாகப் (2372) புலப்படும். அரனிலை - சிவன் திருக்கோவில்.

(அ. சி.) விமானம் - கருப்பக்கிரகத்தின்மேல் கட்டப்படும் கோபுரம். தூலமதாகும் - தூல இலிங்க உருவமாகும். சதாசிவம் - கருப்பக் கிரகத்துள்ள இலிங்க வடிவம் சூக்கும இலிங்கம் ஆகும். பாய் - பரந்த. பலிபீடம் - பலி இடும் இடம். பத்திரம் - இடபம். அரனிலை - சிவாலயம்.

(7)

1690. முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமுங்
கொத்துமக் கொம்பு சிலைநீறு கோமளம்
அத்தன்றன் னாகம மன்ன மரிசியாம்
உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே.

(ப. இ.) முத்து, மாணிக்கம், பவழம், திருவுருச் செதுக்கிய மரக் கொம்பு, பளிங்கு முதலிய வெண்கற்கள், திருவெண்ணீறு, மரகதம் சிவபெருமானை முழுமுதலாக்கொண்டு செந்தமிழின்கண் வரையப் பெற்ற திருமந்திரம் போன்ற ஆகம அருள் நூற்கள், திருவமுது, அமுது முதலாகிய அரிசி ஆகிய பத்தும் அழகிய தூய்மையாக்கும் மணமுள்ள சிவலிங்க வழிபாட்டுக்குரிய இலிங்கம் அமைக்கும் கருவித் துணைப் பொருள்களாகும். துணைப்பொருள் - சதானம்.

(அ. சி.) கொத்தும் அக் கொம்பு - சித்திரவேலை செய்யப்பட்ட மரம். அத்தன்றன் ஆகமம் - சாத்திரப் புத்தகம் (இன்னின்ன இலிங்கமாகப் பூசிக்கலாம் என்றது இம் மந்திரம்).

(8)

1691. துன்றுந் தயிர்நெய்பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனலிர தஞ்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்லம்பொன்
தென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே.

(ப. இ.) இறுகிய தயிர், தூயநெய், பால், மெழுகுவதற்குப் பயன் படும் பசுச்சாணம், துரிசகன்ற செம்பு, தழல், பாதரசம், புனலின்கண் உண்டாம் சங்கினம், சுடப்பட்ட செங்கல், அழகிய வில்வம், பொன் ஆகிய பதினொன்றனுள் காலம் இடங்களுக்கு ஏற்ப அழகியதொன்றனைத் தெளிவாம் திருவடியுணர்வு கைவரச்செய்யும் சிவலிங்கமாக வைத்து வாபடுக. மெழுகு: தேன்மெழுகென்றலுமொன்று.

(அ. சி.) மெழுகு - மெழுகுக்குப் பயன்படும் சாணம். செம்பு - தாமிரம். கனல் - அக்கினி. இரதம். பாதரசம். சலம் - சலத்தில் உண்டாகும் சங்கு (சலஞ்சலம்). வில்லம் - வில்வம். தென் தியங்கு ஒன்றை - அழகு விளங்கும் தயிர் முதல் பொன் இறுதியாகச் சொல்லப்பட்ட பொருள்களில் ஒன்றை.

(9)