73
 

167. அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத் தருள்வெளி தானே.

(ப. இ.) சிவபெருமான் உலகமே உருவமாக விளங்கும் கலப்பால் தானாம் உண்மையினை அருளினன். அமிழ்துண்டும் செத்துப் பிறக்கும் சிறு தெய்வங்களாம் அமரரறியாத சிவவுலகங்களை அளித்தருளினன். திருமன்றுகளில் திருக்கூத்தியற்றும் திருவடித் தாமரையினை அளித்தருளினன். பேரின்பப் பெருவாழ்வாம் அறிவுப் பெருவெளியினை அளித்தருளினன்.

(11)

168. வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

(ப. இ.) திருவருள்வெளி சிவபெருமான்வெளியின்கண் சென்று ஒடுங்கிய முறைமையும், சிற்றுயிர்கள்மாட்டு வைக்கும் பேரன்பாகிய உயிரளி சிவபெருமான் பெரும்பேரின்ப அளியில் அடங்கியவாறும், திருவடியுணர்வு கைவந்த அருளொளி உயிர் சிவஒளியில் உள்ளொடுங்கியவாறும் திருவருளால் சிவஞானத்தால் தெளியுமவர்களே சிவ சித்தராவர். சிவசித்தர் : செம்பொருட்டுணிவினர். வெளி, மனவெளி எனலும் ஒன்று.

(12)

169. சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

(ப. இ.) மேலோதிய சிவசித்தர் சிவவுலகினை இம்மையிலே இருக்குமிடத்தே கண்டு வழிபட்ட மாண்பினர். ஓசையும் அவ்வோசை ஒடுங்கும் தூமாயையும் திருவருளால் தம்முள் கண்ட தனித் தவத்தவராவர். அவர்கள் சிவத்துடன் கூடினமையால் பிறப்பு இறப்பு அற்றுச் சிறப்புற்று என்றும் ஒன்றுபோலிருப்பவர். மலமற்றவர். மலச்சார்பானிகழும் இருவினை மாசற்றவர். என்றும் அழியா விழுப்பேற்றினர். அவர் எய்தும் விழுப்பேறு ஏணிப்படிபோல் அமைந்த அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறினையும் கடந்த மாற்ற மனங்கழிய நின்ற தோற்றருநிலை.

(13)

170. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.