849
 

(ப. இ.) மண்ணும், அதனில் பொருந்தி விரிந்து இருக்கும் நீரும், பொன்போற் காணப்படும் தீயும், புகழ்மிக்கதாகிய வளியும், புகல்மிக்கதாகிய வானமும், நிலைபெற்றுள்ள மனம், இறுப்பு, எழுச்சி ஆகிய எட்டும் அவ் வவற்றின் தன்மையுடன் ஓரொன்றாய் நினைத்து உண்மை ஓர்ந்தால் பூதவெற்றி நிறைவுற்றதென்க. பூதவெற்றி எனினும் பூதசுத்தி எனினும் ஒன்றே. பூதமுறையினை வரும் புறப்பாட்டானும் உணர்க:

"மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங்கு
ஐம்பெரும் பூதத் தியற்கை போலப்."

(புறம், 2.)

இப் பாட்டுத் தலைச்சங்கப் பாட்டென்ப.

ஆசிரியர் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் கூறுவது வருமாறு:

"நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்."

(தொல். பொருள். மரபு, 89)

(அ. சி.) உன்னின் - ஆராயின்.

(10)

2113. முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்மு னாளில்லை
கன்னியைக் கன்னியாகக் காதலித் 1தானே.

(ப. இ.) ஐம்பூதங்களுள் முதற்கண் நிற்பது வானம் இதன்கண் விளங்கும் பண்பு ஓசை ஒன்றே. அவ் வொன்றும் ஒருமகன் என ஓதப்பெற்றது. அதுபோல் வளியாகிய காற்றின்கண் நிற்பன ஓசை ஊறு என்னும் இரண்டுமேயாம். தீயினிடத்து ஓசை, ஊறு, ஒளி என்னும் மூன்றுமாம். நீரினிடத்து ஓசை, ஊறு, ஒளி, சுவை என்னும் நான்குமாம். கன்னியாகிய நிலமகளிடத்து ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் (1049) ஐந்துமேயாம் சிவபெருமானுடைய உன்னித்துப் பொருந்தும் உன்முகத்தின் முன்னாட்களில் இவை இங்ஙனம் கலந்து விரிவு எய்துவதில்லை. கன்னியாகிய மாமாயையைத் தன் வைப்பாற்றற் கன்னியேயாகச் சிவபெருமான் காதலித்தருளினன். அதனால் இவ்வுலகம் நிகழ்ந்து வருகின்றது. வைப்பாற்றல்: விட்டு நீங்கும் சத்தி; பரிக்கிரக சத்தி.

(அ. சி.) முன்னிக்கு - ஆகாயத்துக்கு. ஒரு மகன் - ஓசை ஒன்று. மூர்த்திக்கு - வாயுவுக்கு. இருவர் - ஊறு, ஓசை. வன்னிக்கு மூவர் - தீக்கு ஊறு, ஓசை, ஒளி. வதுவைக்கு நால்வர் - நீருக்கு ஊறு, ஓசை, ஒளி, சுவை.


1. குறிகள்வச். சிவஞானசித்தியார், 2. 3 - 18.

" மின்னுருவை. அப்பர், 6. 54 - 5.