889
 

சொல்லப்படும் விந்து சத்தியாகும். அந்நிலையில் அவ் வுயிர் உடல்முதலியவற்றையும் எய்தும். அவ் வுடல் மாமாயையில் தோன்றும் மந்திரவுடலாகும். மெய்ம்மை - உடலின் தன்மை. விஞ்ஞாகலர்: விஞ்ஞானாகலர் என்பதன் இடைக்குறை.

(17)

2204. மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையுந் தோன்றா வகைநிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏயமன் னூற்றெட் டுருத்திரர் 1என்பவே.

(ப. இ.) இருமலக்கட்டினராகிய பிரளயாகலர்மாட்டு ஆணவமே மேலிட்டு நிற்பதால் ஏனைக் கன்மம் மாயைகள் உள்ளடங்கி நிற்கும். அதனால் அவை தோன்றாவகை நிற்க என ஓதினர். அவர் தமக்கு உடம்பும் தூமாயையினால் அமைந்ததாகும். எனவே அவர் இயற்றுங் கன்மங்களும் இருள்சேர் இருவினையும் கடந்த இறைபணியாகும். ஈண்டு உறைவோரும் இம் மெய்யினரும் நூற்றெட்டு உருத்திரர் என்ப.

(அ. சி.) நிற்க ஆணவம் - ஆணவம் மேலிட்டிருக்க. காமிய மாமாயை - கன்மமும், சுத்த மாயையும்.

(18)

2205. மும்மலங் கூடி முயங்கி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்
மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்
தம்முறை யோனிபுக் கார்க்குஞ் 2சகலரே.

(ப. இ.) ஆணவங் கன்மம் மாயை என்னும் மும்மலமுங் கூடிக் கலந்து அவற்றையே தாமெனக்கொண்டு மருள்வோரே சகலராவர். சகலர் - முப்பிணிப்பினர். இவர்கள் யாவரென ஆயின் வருமாறு: இந்திரனாகிய வானவர்கோன் உள்ளிட்ட தேவர்களும், வானவரும், மக்களும், உண்மையுணர்வு இல்லாத அயன் அரி முதலாகப் புழு ஈறாகச் சொல்லப்படுவோருமாவர். இவர்கள் அனைவர்களும் மூலப்பகுதி மாயைக்கு உட்பட்டவர்களே. இவர்கள் செய்தொழில் வேற்றுமையினால் சிறப்பொவ்வாத பலவகையான பருவுடம்பைத் தூவாமாயையினின்றும் தோன்றாத்துணைவன் படைத்துக் கொடுத்தருளப் பெறுபவர்கள். இருவினைக்கீடாக இறந்தும் பிறந்தும் இடையறாது இன்னலுறும் இயல்பினர். யோனி - பிறப்பு. ஆர்க்கும் - கட்டுப்படும்.

(19)

2206. சுத்த அவத்தையில் தோய்தவர் மும்மலச்
சத்தசத் தோடத் தனித்தனி பாசமு
மத்த இருள்சிவ னான கதிராலே
தொத்தற விட்டிடச் சுத்தரா 3வார்களே.


1. மட்டிட்ட. சம்பந்தர், 2. 47 - 1.

2. பிறப்பொக்கும். திருக்குறள், 972.

3. உணருரு. சிவஞானபோதம், 6.

" அல்லலென். அப்பர், 5. 1 - 4.