17. அதிபதி செய்து அளகை வேந்தனை நிதிபதி செய்த நிறைதவ நோக்கி அதுபதி யாதரித் தாக்கம தாக்கின் இதுபதி கொள்ளென்ற எம்பெரு மானே. (ப. இ.) அளகை வேந்தனாகிய செல்வக் கிழவனை அந் நகர்க்குத் தலைவனாக்கி அருளினவன் சிவன். அச் செல்வக் கிழவனைச் சிவன் நோக்கி அளவில்லாத செல்வத்துக்கு உரியவனாகும்படி அருளினன். இதுவே உனக்குச் சிறந்த திருவூர் கொள்ளென வழங்கியருளினவன் சிவபெருமான். (அ. சி.) அதிபதி செய்து - கற்பாந்தரத்திலும் அளகை நகரை அழியாமற் செய்து. (17) 18. இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்1 முதுபதி செய்தவன் மூதறி வாளன் விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி அதுபதி யாக அமருகின் றானே. (ப. இ.) மணங் கமழாநின்ற ஏழுலகமும் சிவபெருமானின் உடைமைப் பதியாகும். இவற்றினும் சிறப்பாகப் பேரொடுக்கக் காலத்துத் தோன்றும் சுடுகாடாகிய முதுபதியினையே தன் இருப்பிடமாக அமைத்துக் கொண்டவன், இயற்கையுணர்வும் முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த மூதறிவுசேர் பேரறிவாளன் அவன்; ஆயினும் திருவருள் துணையால் திருவடியுணர்வால் தன் நெஞ்சினை அச் சிவனுக்கு இருப்பிடமாக அமைக்கும் நற்றவத்தோர் உள்ளமே உறைவிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றனன். (அ. சி.) விதுபதி செய்தவன் - மதிக்கலையைப் பதியச் செய்வதாகிய யோகமார்க்கத்தை அநுட்டித்தவன். (18) 19. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறநெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவங் கடிமலர்க் குன்ற மலையது2 தானே. (ப. இ..) ஆக்கப்பாடுகளாகிய மாயாகாரியப் பொருள்கள் அனைத்திற்கும் முடிவாகிய இறப்பினையும் தோற்றமாகிய பிறப்பினையும் முன்னுதலாகிய திருவுள்ளத்தானே படைத்தருளியவன் சிவபெருமான். அவனே அடிகள். அவன் உறையும் அறநெறியினை ஆராயின் அஞ்சத் தகுந்த இடியும் வேறு பல முழக்கமும் ஈசர் உருவும் தனக்கு அடக்கம் என்பதனைப் புலப்படுத்த ஆண்டும் உறைவன். மேலும் அவன் எங்கும் நிறைந்தவன். அதனால் எதுவும் அவனுக்கு விலக்கன்று. ஆருயிர்க்கு 1. ஏழுடையான். 8. திருக்கோவையார், 7. 2. பொன்னின். 12. திருமலைச் சிறப்பு, 1.
|