2279. 1முன்னைப் பிறவியிற் செய்த முதுதவம் 2பின்னைப் பிறவியிற் பெற்றால் அறியலாந் தன்னை யறிவ தறிவாமஃ தன்றிப் பின்னை யறிவது பேயறி 3வாகுமே. (ப. இ.) ஒருவர் முற்பிறவியிற் செய்த நற்றவப்பேறு பின்னைப் பிறவியில் பெண்ணொரு கூறனைப் பேணும் பெருந்தொண்டால் உணரலாம். திருவருளால் தன்னைத் தலைவனை உணரும் முறையில் உணர்தல் வேண்டும். தலைவனை உணரும் முறையில் உணர்தல் என்பது அடிமை என்று உணர்தல். அஃது 'ஆள்வாரிலி மாடுஆவேனோ' என்றருளிய திருமறை முடிவாலுணர்க. சார்பான் சாரப்படும் பொருளையுணர்தலே மக்கட்பிறப்பின் பெரும்பேறு. அவ் வுண்மை முறைப்பெயரானும், முதன்மைப்பெயரானும் உணர்க. இவ் வுண்மை ஏனையுயிரினங்களுக்கு இன்று. அதுபோல் ஆருயிர்க்கு எஞ்ஞான்றும் சார்பென நின்று இன்பங் கொடுத்தருளும் சிவபெருமான் சார்பினை எய்திய அடிமை என்றுணரப்படுதலே சிறப்பாம் என்க. அடிமை என உணர்தலே மெய்யுணர்வாகும். அதுவே வேண்டத்தக்க அறிவாம் என்க. இவ் விழுமிய அறிவல்லாத ஏனைய அறிவுகளெல்லாம் பழுதறிவாகும் அதுவே பேயறிவாகும். 'முன்னையறிவினில்' என்ற பாடத்திற்கு முன்னை அறிவின் தொடர்ச்சியால் எனவும் 'பின்னையறிவினை' என்ற பாடத்திற்குப் பின்னைத் தோன்றும் சிவனையறியும் அறிவெனவும் பொருள் கொள்க. (15) 2280. செயலற் றிருக்கச் சிவானந்த மாகுஞ் செயலற் றிருப்பார் சிவயோகந் தேடார் செயலற் றிருப்பார் செகத்தொடுங் கூடார் செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் 4டாமே. (ப. இ.) திருவருளால் செயலற்றிருப்பதைச் சமாதி அல்லது நிட்டை என்பர். 'தூங்கிக்கண்டார்' (173) என்பதும் இப்பொருட்டு செயலற்றிருக்கச் சிவஇன்பம் ஆகும். செயலற்றிருப்பார் சிவயோகந் தேடார். அவர்கள் உலகநிலையிலா வாழ்வுடனும் கூடார். செயலற்றிருக்கும் திருவினர்ககே சிவபெருமானின் பேரின்பச் செய்தியுண்டாகும். செயலறல் அகப்புறச் செயலறலாகும் ஆனால் ஆண்டான் அடியின்ப நுகர்வுச் செயலுண்டு. அது ஒருவாறு நிற்கும் நிட்டை. (16)
(பாடம்) 1. முன்னை யறிவினிற். 2. பின்னை யறிவினைப் 3. என்னை. அப்பர், 5. 91 - 8. " தன்னிற். " 5. 97 - 29. " என்ன புண்ணியம். சம்பந்தர், 2. 106 - 1. " அறிவுடையார். திருக்குறள், 427. " நஞ்செய. திருவுந்தியார், 6. " தன்னை. தாயுமானவர், 34. தன்னை - 1. 4. நாமல்ல. சிவஞானபோதும். 10. 2 - 1. " செய்தற். திருக்களிற்றுப்படியார், 61.
|