960
 

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல் வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே."

- 8. அச்சோப்பத்து, 1.

(அ. சி.) அயர்வற்றறி - மயக்கமற்றுக் காண்பாய். தொந்தத் தசி - துவம் + தத் + அசி - நீ சிவமாயிருக்கிறாய்.

(35)

2364. மன்னிய சோகமா மாமறை யாளர்தஞ்
சென்னிய தான சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் 1தோன்றுமே.

(ப. இ.) நிலைபெற்ற அது நான் என்னும் ஆழ்ந்த நினைவினால் அவனே தானாகி நிற்கும் நிலை சோகம் எனக் கூறப்படும். ஆழ்ந்த நினைவு - பாவனை. இக் குறிக்கோள் மாமறையாளர்க்கு ஏற்படுவதாகும். அம் மறையாளர் முடியணியாத் திகழும் அருண்மறை 'சிவோகம்' எனப்படும். சிவோகம், சிவனுடன் கூடுதல். சிவோகம் இஃது என்று கூறத்தகும். இத்தகைய அரும்பொருள் சித்தாந்த மாமறையால் ஆராயப்படும் பொருளாகும். இப் பொருளை ஆராயும் எழில் நூல் ஆகமம் எனப்படும். சோகம்: ச + அகம் = அது நான். சிவோகம் - சிவத்துடன் கூடுதல்.

(அ. சி.) சோகமாய் - சோகம்பாவனையினால் அவனே தானாகி. சென்னியதான - தலையான் சிறந்த.

(36)

2365. முதலாகும் வேத முழுதா கமமப்
பதியான ஈசன் பகர்ந்த திரண்டும்
முதிதான வேத முறைமுறை யாலமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்த மாமே.

(ப. இ.) முதல் நூலாகிய வேதமும் முழுமுதல் நூலாகிய ஆகமமும் நல்லடியார் வாயிலாக முதல்வனாம் சிவபெருமானால் (2358) அருளிச் செய்யப்பட்டனவாகும். இவ்விரண்டனுள் முதன்மையான வேதமும் முறைமுறையாலமர்ந்த வேதாந்தமாகும். ஆகமம் நனிமிகச் சிறந்த சித்தாந்தமாகும்.

(அ. சி.) முதலாகும் - முதலில் உண்டான. அதிகாதி - நனி மேம்பட்ட.

(37)


1. கண்டவிவை. சிவஞானசித்தியார், 9. 3 - 1.