997
 

(ப. இ.) திருவருளால் ஆருயிர் உடல், உணர்வு, உணர்த்து மெய் ஆகிய மூன்றிடங்களிலும் பொருந்தும். இம் முறையினையே பருவுடல் நுண்ணுடல் முதலுடல் என்பனவற்றிற்குக் கூறினும் பொருந்தும். அவ்வருளாலேயே செவ்வி வாய்த்தற் பொருட்டு உரித்தெனக் கருதிய அம்மூன்றனையும் அவ்வுயிர் தனக்கு வேறெனக் காணும். அதுபோன்று அருளோன். அருள் ஆருயிர் என்று சொல்லப்படும் சிவ பர சீவர்கள் உடனுறை வேறுபாடுகளும் ஒன்றெனல் ஆகும்.

(அ. சி.) கடனுறு - உரியதான.

(1)

2447. ஒளியை யொளிசெய்து வோமென் றெழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியுஞ் சிவபதந் தானே.

(ப. இ.) திருவருள் நினைவால் மூலத்தழலொளியை ஓமென்று கணித்து எழுப்பி ஒளிரச் செய்தல் வேண்டும். அத்துடன் மேல்மூச்சு கீழ்மூச்சுக்களை அடக்குதல் வேண்டும். அதன் பொருட்டு உயிர்ப்புப் பயிற்சியினை மேற்கொள்ளுதல் வேண்டும். அதன் பொருட்டு உயிர்ப்பினை முறையாக வாங்கி உள் நிரப்புதல் வேண்டும். அதன்பின் நெஞ்சத்து வெளியைச் சிவ நினைப்பால் வெளி செய்தல் வேண்டும். வெளி செய்தபின் அதனை அருள்வெளியாக்குதல் வேண்டும். அதன் வாயிலாகக் குறிக்கோளை மேலெழச் செய்தல் வேண்டும். இவ் வுண்மைகளைத் திருவருள் தெளிவிக்கத் தெளியும் நல்லார் சிவபெருமான் திருவடியினைச் சார்வர். அதுவே சிவநிலையாகும். வெளி - நெஞ்சவெளியும் அருள்வெளியும் ஆகும். வாங்கி - மூச்சை உள்ளிழுத்து.

(அ. சி.) ஒளியை - மூலாக்கினியை. வளிசெய்து - பூரக, கும்பக, இரேசகம்செய்து. வெளியை - வெள்ளிய சுக்கிலத்தை.

(2)

2448. முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த் தாவதக்
கைக்கா ரணமென்னத் தந்தனன் காணந்தி
மிக்க மனோன்மனி வேறே தனித்தேக
ஒக்கும துன்மனி யோதுட் சமாதியே.

(ப. இ.) உள்ளம் உரை உடல் என்னும் மூன்று கருவிகளின் சோர்வினை அகற்றி ஆகவேண்டிய அருள் நிலையைக் கைக்கனி என்னும்படி தந்தருளினன். அவன் சிவபெருமானாகிய நந்தியாகும். ஆணை நிலையாகிய புருவ நடுவின்கண் விளங்கும் மனோன்மனி அங்கு நின்றும் மேலோங்க அதன்மேல் உன்மனையாகிய திருவருள் துணையாகும். அத் துணையால் ஒருமை யுணர்ச்சியுண்டாகும். அவ் வுணர்ச்சியால் செயலற்ற திருநிலை யெய்தும். இதனையே நிருவிகற்பசமாதி என்ப. இதனை ஒருமை யொடுக்கம் என்ப.

(அ. சி.) மூர்ச்சை - சோர்வு, கைக்காரணம் என்ன - கையில் வைத்து உணரும் விதமாக. மிக்க....ஏக - மனோன்மனி இருக்கும் ஆஞ்ஞையில் செல்ல.

(3)