(ப. இ.) மேடான இடத்தில் தங்கிநில்லாது பள்ளத்தின் வழிப்பாய்ந்தோடும் வெள்ளநீர்போல் உடலிடை நில்லாது அன்புப் பள்ளம் நோக்கி இன்பப் பேறருள் முன்போடிப்பாயும் உறுபொருளாகிய சிவபெருமானை ஆருயிர்க்குக் காட்டி அணைப்பித்தருளுவது திருவருளேயாகும். மரக்கலம் கடலிடையே நின்றுவிடாது கரைசேர்ந்து மக்களுக்கு அரும்பொருள் அளித்துப் பெரும்போகந் தருவதாகும். அதுபோல் அடலெரி வண்ணனும் ஆருயிர் பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரைசேர்தற் பொருட்டு இணையில் புணையென அங்கு நின்றருளுகின்றனன். (அ. சி.) திடரிடை - மேட்டில். உறுபொருள் - சிவன். கலம் - மரக்கலம். அங்கு - உடலில். (3) 2520. தாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும் போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர் காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள் தீநெறி செல்வான் திரிகின்ற 1வாறன்றே. (ப. இ.) தாமரை நூல்போன்ற மிகவும் மென்மைத் தன்மை வாய்ந்த அன்பு நாரால் அஞ்செழுத்தும் நெஞ்சு தொடுத்துச் சிவபெருமான் திருவடியில் மனம் படியுமாறு தடுத்துப் பிணைப்பர். பரமாகிய சிவபெருமான் திருவடியிற்றலைக் கூடும் நன்னெறி நான்மை வழிச்சென்று அனைத்துயிர்க்கும் அரும்பெரும் திருவருட் காவலராய்ப் புறம் புறம் திரிவர். அவர்கள் அருளால் கண்டு சிவபெருமான் திருவடியைக் காணும் வழியை அங்கை நெல்லிக் கனியெனக் காட்டவும் தீவினையாளர்கள் காண்கின்றிலர். கலதிகள் - தீவினையாளர்கள். அவர்கள் பிறப்புக்கு வாயிலாம் தீநெறிக்கண் செல்லுதற்பொருட்டுப் பலவாறு திரிந்து அலையும் பாவவினைஞராவர். (அ. சி.) தடுப்பார் - மனத்தைத் தடுப்பார். புறமே உழிதர்வர் - துறவறத்திலே செல்வர். காண்வழி - அறியத்தக்க நெறி. கலதிகள் - மூடர். (4) 2521. மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி யாவனைக் குறித்துடன் காடும் மலையுங் கழனி கடந்தோறும் ஊடும் உருவினை யுன்னகி 2லாரன்றே. (ப. இ.) திருவருளால் அறியாமையும் புலக்கோளறிவும் தம்மை மூடுதலின்றி நன்னெறி நான்மைவழிச் சென்று தலைப்படும் பேரன்பு வாய்ந்த மக்கள் நந்தி திருவடியினைக் கூடுவர். அவனையே இடையறாது குறித்துக் காடாகிய முல்லையும், மலையாகிய குறிஞ்சியும், கழனியாகிய மருதமும், கடமாகிய பாலையும் (இனம்பற்றிக் கடலாகிய நெய்தலும்) ஆகிய எல்லாப் பக்கங்களிலும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்
1. செத்துச். திருக்குறள், 5. 100 - 2. " பால்நினைந். 8. பிடித்தபத்து, 9. 2. மாலை. 12. சம்பந்தர், 208.
|