எங்கள் பரஞ்சோதி நாடகத்து இசைந்து திருக்கூத்தியற்றியருளுகின்றனன். (அ. சி.) இம் மந்திரம் இசையில் உள்ள பண்கள் வகைகளை நாடகப் பண்புக்கேற்பக் கூறுகிறது. (22) 2738. மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய் மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்க முடிவாகி முந்தியே மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தாமே. (ப. இ.) ஒருமலமுடையார், இருமலமுடையார், மும்மலமுடையார் என ஆருயிர்கள் மூவகைப்படும். மும்மலமும் ஆணவம் கன்மம் மாயை எனப்படும். இவை விரியுங் காலத்து, ஆணவம், கன்மம் மாயை, மாயையாக்கம், இவற்றைத் தொழிற்படுத்தும் நடப்பாற்றலாம் திருவருள் ஆக ஐந்துமாம். ஆருயிர்களின் மூச்சு முந்நூற்றறுபதுடன் ஆறு உறழ இரண்டாயிரத்தொருநூற்றறுபது உயிர்ப்பாகும். பன்னிரண்டு ஆதாரங்களும் வழியாய் அக்கமாகிய ஆன்மாவின் கண்ணும், மூன்றுலகின்கண்ணும் தொன்மையே சிவன் ஆடிருளினன். மூன்றினில் என்பதற்கு மூன்று மண்டலங்களிலெனவும், ஐந்தினில்: நடுக்கம், விளக்கம், ஆட்சி, தோன்றுவித்தல், இயக்கம் என்று சொல்லப்படும் ஐம்பெரு மந்திரங்களெனவும், மூச்சு வேறுபாடு முந்நூற்றறுபது, ஆறாதாரங்கள் எனவும் கூறலுமொன்று. (அ. சி.) மூன்றினில் - ஒருமலமுடையவர். இருமலமுடையவர், மும்மலமுடையவர். அஞ்சாகி - ஐந்து மலங்களாய். முந்நூற்றறுபதாய் மூன்றினில் ஆறாய் - மூன்றுவித உயிர்களிடத்திலும் 360 x 6 = 2160 சுவாசபேதமாய் முதற்பன்னீர் மூலமாய் - மூலாதாரமாய். அக்கம் - ஆன்மா. (23) 2739. தாமுடி வானவர் தம்முடி மேலுறை மாமணி ஈசன் மலரடித் தாளிணை வாமணி யன்புடை யார்மனத் துள்ளெழுங் 1காமணி ஞாலங் கடந்துநின் றானன்றே. (ப. இ.) அழகிய சிறந்த மணிகண்டத்தையுடைய சிவபெருமானின் செங்கமலத் தாளிணைகள் பிறந்திறக்கும் பெற்றிமை வாய்ந்த ஆருயிர் இனத்தராய்ப் புண்ணியப் பேற்றினால் வானவராய்த் திரியும் வானவர் முடிக்கண் உறைந்தருளின. அழகு பொருந்திய சிவ அன்புடையார் மனத்துள் எழுந்தோங்கி நிற்கும் சிவபெருமான் வேண்டக் கொடுக்கும் கற்பகத்தையும், சிந்தித்தது கொடுக்கும் சிந்தாமணியையும் ஒருபுடையொப்பாகவுள்ளவன். அவன் அம் மெய்யன்பர்களைத் தானாக்கித் கொண்டருளினன். அவன் ஞாலங்கடந்து நின்றருளும் மேலோனாயினன். (அ. சி.) முடிவானவர் - ஒருகாலத்தில் இறக்குந் தன்மையுள்ளவானவர். வாமணி - வாமம் + அண்ணி - அழகுபொருந்தி. காமணி - கா + மணி - கற்பக தருவும் சிந்தாமணியும். (24)
1. காரணி. 8. திருக்கோவையார், 400.
|