1159
 

2795. மூவகைத் தெய்வத் தொருவன் 1முதலுரு
வாயது வேறா மதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.

(ப. இ.) உடல் மெய்யாகிய இருபத்து நான்காம் மெய்யுச்சியில் அயன் அரி அரன் என்னும் மூவரும் நின்றனர். இவர்கள் படைப்போன், காப்போன், துடைப்போன் என்னும் பெயரானும் அழைக்கப்படுவர். இம் மூவருள் ஒருவனாகிய அரன் தொழிலால் இவர்கள் வரிசையின் வைத்து எண்ணப்படுவன். ஆயினும் ஏனையிருவகையினரையும்போன்ற பெருமயக்குறுவோனல்லன். அதனால் அவன் வேறுபட்டவனுமாவன். அதுபோல், அணுவாகிய ஆருயிரும், பரனாகிய சிவனும் கலப்பால் ஒன்றாய் விராஅய் நிற்பினும் பொருட்டன்மையால் சிவன் வேறாவன். சிவபெருமான் நினைப்பிற்கும் எட்டா நெடுஞ்சேய்மைக் கண்ணுள்ளவனாவன். ஆருயிர்ச் செயலறல், அருட் செயலறல், அருளோன் செயலறல் ஆகிய மூன்றும் முத்துரியமாகும். இவற்றான் ஆருயிர்கள் சிவபெருமானின் திருவடியிணையினை எய்துதல் கூடும். எய்துதற்குரிய வழிகளும் இவையே என்று இறை நூல் இயம்பும் என்க. இறை நூல் (2358) என்பன செந்தமிழ் நெறி நூலும் துறை நூலுமாகும். நெறி நூல் வேதம், துறை நூல் ஆகமம். இவ்வுண்மை 'வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க' என்னும் சேக்கிழாரடிகள் அருண்மொழியான் உணரலாம்.

(அ. சி.) மூவகைத் தெய்வம் - அயன், அரி. அரன். ஒருவன் முதல் உருவாயது வேறாம் - ஒருவனாகிய அரன் அம் மூவரில் ஒருவனாகியும் வேறாகியும் நிற்பதுபோல. அணு-சீவன். சேய-எண்ணுதற்கரிய. முத்துரியம்-சிவ, சீவ, பரதுரியங்கள். இறைநூல் - தமிழ் வேதங்களும், தமிழ்ச் சிவாகமங்களும்.

(5)

2796. உருவன்றி யேநின் றுருவம் புணர்க்குங்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்குங் கூடவொண் 2ணாதே.

(.ப. இ.) சிவபெருமான் தனக்கென ஓர் உருவம் இல்லாதவன். அங்ஙனமிருந்தும் ஆருயிர் உய்தற்பொருட்டு அவ் வுயிர்கட்கு மாயையினின்றுங் காரியப் பொருளாக முதலுடம்பு, மீநுண்ணுடம்பு, குணவுடம்பு, நுண்ணுடம்பு, பருவுடம்பு என்னும் ஐவகை உரு வுடலையும் படைத்தருளி நல்குகின்றனன். இதுவே அவன் உயிர்க்கு உருவம் படைத்துப் புணர்க்கும் உண்மையாகும். தனக்கோர் காரணமின்றித் தானே முழுமுதலாய் நிற்பவன் சிவன். ஆயின் அவன் எல்லாவற்றிற்கும் எஞ்ஞான்றும் வினைமுதற் காரணமாக இருப்பவன் ஆவன். அவன்


1. தீர்த்த. அப்பர், 5. 2 - 2.

2. நோக்காது. சிவஞானபோதம், 1. 2 - 3.

" உலகமே. சிவஞானசித்தியார், 5. 2 - 6.

" மந்திரத்தான். " 12. 3 - 3.

" கருவினா. சம்பந்தர், 3. 35 - 3.