(ப. இ.) ஐம்பூதக் கூட்டரவால் அமைந்த இவ் வுடம்பாகிய வித்தினை விதைக்கும் செய் நடப்பாகிய மறைப்பாற்ற லென்க. அவ் வித்தினிடமாக விருந்து ஆனை யென்று சொல்லப்படும் ஆருயிர்த் தொழில் தோற்றம் உறுவதாயிற்று. அச் செய்யாகிய நடப்பாற்றலின் உண்மைத் தெளிவை அறிவாரில்லை. உண்மைத் தெளிவாவது ஆருயிர்கள் அவ் வித்தினிடத்துக் கொள்ளும் மயக்கம் நீங்கிச் சத்தாகிய சிவத்தினிடத்துக் கொள்ளும் முயக்கம் ஓங்கி வாழுமாறு செய்வதே அதன் தொழிலென்பது. அவ் வாற்றல் மையணி கண்டனின் வழிநிலையாகும். அந் நிலையினைக் குறிக்கொண்டு நாடுவதாகிய மனம் பெறுதல் வேண்டும். அதுவே தியானம் என்ப. ஈண்டுத் தெளிவென்பது உண்மை யுணர்வதாகிய தூய்மையின் மேற்று. அப்பொழுது அந் நடப்பாற்றலாகிய அந்நிலம் மெய்யாகவே ஆருயிர் புகத்தகும் உலையா நிலைசேர் சீரிடமாகும் புகுதலும் எளிதாகும். (அ. சி.) ஐயெனும் வித்து - ஐம்பூதங்களாகிய வித்து. ஆனை - சீவனை. செய் - திரோதாயி, திருவருட்சத்தி. (5) 2831. பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள கள்ளச்செய் யங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் யங்கே உழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் யாகி விளைந்தது தானன்றே. (ப. இ.) பள்ளச் செய் என்று சொல்லப்படும் செயலறலாகிய உறக்கநிலை ஒன்றுண்டு. அதன்மேல் பாழ்ச் செய்யாகிய இன்பமில்லாத கனவும் நனவும் இரண்டுண்டு. அவற்றூடு உயிர்க்குயிராய் யாண்டும் கரந்து நிற்கும் கள்ளச் செய்யாகிய சிவபெருமானும் அங்குக் கலந்து நிற்கின்றனன். இம் மூன்று நிலையினும் ஆருயிர்களின் மனமாகிய வயலின்கண் மெய்யாகிய தத்துவ ஆராய்ச்சி என்னும் உழவினைச் செய்தல்வேண்டும். அவ் வுழவு செய்தார்க்கு வெள்ளச் செய் என்று சொல்லப்படும். திருவருளின்ப விளை நிலம் விளைந்து கைகூடிற்று. வெள்ளச் செய் : அருள் வெள்ளம் - பேரின்பப் பெருவெள்ளம் பெருக்கெடுத்து உருக்கொடு நிலையும் நிலைக்களம். (அ. சி.) பள்ளச்செய் - சுழுத்தி. பாழ்ச்செய் இரண்டு-இன்பம் இல்லாத நனவு - கனவு. கள்ளச்செய் - கரந்திருக்கும் சிவம். உள்ளச் செய் - மனமாகிய வயல். உழவு-தத்துவ ஆராய்ச்சி. வெள்ளச்செய் - சிவானந்த வெள்ளம். (6) 2832. மூவணை யேரு முழுவது முக்காணி தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும் நாவணை கோலி நடுவிற் செறுவுழார் காலணை கோலிக் களருழு 1வாரன்றே.
1. மெய்ம்மையாம். அப்பர், 4. 76 - 2. " அகனமர்ந்த. சம்பந்தர், 1. 132-6. " படியின். 12. வெள்ளானைச் சருக்கம், 2. " உளரென்னும். திருக்குறள், 406. " இரும்பார்க்குங். நாலடியார், 122.
|