அருவரை யேறி அமுதுண்ண மாட்டார் திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே. (ப. இ.) ஆருயிர்களுக்கு திருவருள் நாட்டத்தால் உயிர்ப்புப் பயிற்சியால் தம் உண்மைநிலையினை அறியும் தன்மையொன்றுண்டாம். வானோர் இவ் வுண்மையுராது அமிழ்துண்டால் நீண்டநாள் வாழலாமென்று பெரிய மலைபற்றிக் கடல்கடைந்தனர்; அமுதுண்டனர்; பயனின்றி மாண்டனர். உயிர்ப்புப் பயிற்சியால் நடுநாடிவழியாக அருவரையாம் உச்சித்துளை ஏறித் திருவடியமிழ்துண்ணமாட்டாதார் அத்தேவர்கள். அத் திருவடியமிழ்துண்பார்க்கு எல்லையில்லா அருட்பெருமையுடைய உயிர்ப்புப் பயிற்சியால் மனம் அடங்கிற்றென்க. உரு - ஆவியின் உண்மைநிலை (தற்சொரூபம்). கருவரை - நடுநாடி எனலுமாம். (அ. சி.) கருவரை - கருங்கல்லால் ஆகிய வரை. அருவரை - வீணாத்தண்டு. திருவரையா மனம் - அளவிடப்படாத பெருமையுள்ள மனம். (8) 606. நம்பனை யாதியை நான்மறை யோதியைச்1 செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க் கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே. (ப. இ.) ஆருயிர்கள் அனைத்தும் நம்புதற்கிடமாகிய நம்பனை, ஆதியாகிய நடப்பாற்றலையுடைய சோதியை, நான்மறைகளையும் உள்ளிருந்தெழுப்பி ஓதுவிக்கும் ஓதியை, செம்பொன்னகத்துத் திகழும் வனப்பாற்றலாகிய திருவருட்சோதியை, சார்தற்பொருட்டு அவன் திருவடிக்குப் பேரன்புபூணுதல் வேண்டும். வேட்கைகளை யொடுக்கிப்போதல் வேண்டும். அங்ஙனம் செல்வார் நடுநாடிவழி ஏறித் திருவடிக்கண் கலந்திருப்பார். வீணாத்தண்டு - நடுநாடி. கூட்டமிட்டார் - கலந்திருந்தார். (அ. சி.) கொம்பேறி - வீணாத்தண்டு ஏறி. (9) 607. மூலத்து மேலது முச்சது ரத்தது காலொத் திசையிற் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையிணில் நெற்றிநேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. (ப. இ.) மூலத்துக்கு மேலாக முக்கோணமும் நாற்கோணமும் உள்ளன. உயிர்ப்புக்கள் ஒத்துப்பொருந்தினால் கூடுகின்ற பொருத்தில் திங்கள்மண்டிலத்தினின்றும் காணப்படும் அழகிய திருக்கோலங்கள் வெவ்வேறாகும். மூலத்து - வருவாய்க்கு. முச்சதுரத்தது - முக்கோணமும் நாற்கோணமும் உள்ளன. கால் - உயிர்மூச்சு. ஒத்து இசையில் - உயிர் மூச்சுக்கள் பொருந்திச்சேரில் சந்தினில் - பொருத்தில். மேலைப் பிறை - மேலேயுள்ள திங்கள் மண்டிலம். நெற்றிநேர்நின்ற - புருவநடுவில் வெளிப்பட்டுநின்ற கோலத்தின் கோலங்கள் - அழகிய அருள்வடிவத் தோற்றங்கள். (10)
1. சொற்பிரிவி. சம்பந்தர் 3. 78 - 2. " ஒழுகலரி. " 68 - 12.
|