205. மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை மேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே. (ப. இ.) வீட்டை யொப்பாகிய உடம்பு ஆவிநீங்கிய காலத்து வீங்கற் காற்று மண்டையோட்டைப் பிளந்து கொண்டு செல்லும். அப்பொழுது மேலே மூடப்பட்டு முகடு இல்லாது இருக்கும். அதனால் மேலும் முகடில்லை என்றனர். அம் முகட்டின்கீழ் விளிம்பாகிய கரையுமில்லை. பயனில்லாத காலும் இரண்டுண்டு, மூடும் அலக்கும் ஒன்றுண்டு. ஓலையான் மேய்ந்தவர் ஊடுவரியாமை விட்டனர். இவற்றைக் கூட்டி அமைத்த படைப்போனால் செய்யப்பட்ட வெள்ளிக் கோயில் போன்றது உடம்பு. தளி - கோயில். (19) 206. கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை ஆடும் இலையமும் அற்ற தறுதலும் பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத் தேடிய தீயினில் தீயவைத் தார்களே. (ப. இ.) ஆவி நீங்கிய உடம்பு இந்நிலத்தே கிடந்தது. ஆயினும் முன் அதன்கண் காணப்படும் இயற்கைப் பொலிவு முதலிய காட்சிக்குரிய ஒப்பனைகள் ஒன்றும் இல்லை. உண்டல் உழைத்தல் ஓடல் ஆடல் முதலிய இயக்கத்தொழில்களும் அற்றொழிந்தன. அவை அறுதலும் திருமறை முதலிய செழுந்தமிழ் அருட்பாடல்களைச் சிலர் பாடுகின்றனர். இசையொடு பொருந்த ஒப்பாரி வைத்து மாதர்நல்லார் பலர் காதலால் ஓதி அழுகின்றனர். ஏனையோர் அவ்வுடம்பினைச் சுடுகாட்டிற்கு வேண்டும் பொருள்களுடன் ஓடியெடுத்துச் சென்று தீயினில் எரித்துத் தீ எரித்தனர். (அ. சி.) கூடம் - உடல். கோலம் - சித்திரம். (20) 207. முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற் கெட்ட தெழுபதிற் கேடறி யீரே. (ப. இ.) உயர் கருத்தோன்றுங் காலத்து மீன் முட்டை அளவான உடம்புடன் தோன்றும். அவ்வுடல் தாய் வயிற்றினில் முந்நூறு நாள்வரை தேடியமைத்த எய்ப்பில் வைப்புப் பொருளாய்த் தங்கியிருக்கும். பின்பு அருளால் வெளிவரும். வெளிவரும்போது இன்னவாறென்று கூறுவதற்கு ஏதேனும் இல்லை. உறுதிப்பாடான அறிவில்லாத ஏழைகளே! உலக மயக்கமாகிய பண்டைப் பயிற்சி பிறந்தநாள் தொட்டுச் சிறிது சிறிதாக வளர்ந்து பன்னிரண்டு ஆண்டில் நன்றாக நிரம்பும். அம் மயக்கம் எழுபதாண்டு அளவையினுள் முற்றுற்றுக் கேடெய்துவிக்கும். எனவே, எண்பத்திரண்டு ஆண்டில் உலகப் பசை தானாகவே விலகும் என்க.
|