(ப. இ.) விண்ணின்கண் நீருக்கு வெண்மையும் இன்சுவையும் தன்னியல்பான் உள்ளன. ஆனால் அந்நீர் மண்ணின்கண் வந்தபின், தான் சேர்ந்த மண்ணினுக்கேற்றவாறு வண்ணமும் சுவையும் எண்ணமின்றித் திரிந்து நண்ணுகின்றது. இதுவே சார்ந்ததன் வண்ணமாய் விளங்கும் இயல்பும் உரிமையும் உள்ள ஆருயிர்கட்கு ஒப்பாகும். மண்ணிற்சார்ந்து எண்ணமின்றித் திரிந்த நீர்போல் மாக்களும் சார்ந்த இடத்துக்கு ஏற்றவாறு உள்ளந் திரிபுறுவர். அத் திரிபுணர்ச்சியினால் அறியாமையான் மூடப் பெறுவர். உண்மைத் தன்மைத் தெய்வம் இதுவென வுணரார். இறைவன் இவன் என மெய்ம்மை யுணரார். எண்ணித்திற் கலங்குவர். நல்லார் அத் தண்ணீரை வீட்டிற்குக் கொண்டுவந்து தேற்றுவித்தினால் தெளித்து இன்சுவைத்தாய் விடாய் தணியப் பருகுவர். அதுபோல் 'முத்திநெறியாத மூர்க்கரொடு முயலும்' ஆருயிர்களைப் 'பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்' சித்தமலம் அறுவித்துச் சிவமாக்குவன்' செம்பொருட் செல்வன். அதனால் அவ்வுயிரும் கலக்கத்தினின்றும் நீங்கி நலக்க நலமருளும் சிவனாகும். (அ. சி.) கலங்கிய நீரின் தன்மை தெரியாததுபோல, எண்ணங்களால் கலக்குண்ட மனத்தையுடையார் சிவத்தின் தன்மையை அறியமாட்டார். சித்தத்தைக் கலங்கவிடாமல் தெளியவைத்தால் சிவம் வெளிப்படும் என்பது இம் மந்திரக் கருத்து. (9) 2949. மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்குஞ் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்தொழிந் 1தேனன்றே. (ப. இ.) நன்னெறிநான்மை (2615) நற்றவமாம் மெய்த்தவப் பயனருளும் மெய்ப்பொருளாம் ஒருவன் சிவபெருமான். அவன் திருவடியிணையினைப் பத்திமேலீட்டினால் விழையும் மெய்யடியார்கட்கு 'தடக்கை நெல்லிக்கனி யெனக்காயினன்' என்பது போன்று அவன் 'கைத்தலஞ் சேர்நெல்லிக்கனி' யொத்து விளங்குவன். அவன் இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய தூயோன். சிவவுலகத்தின்கண் நின்று வழி பாடாற்றித் தூநெறிக்கண் நிற்கும் தேவர்களுக்குச் சிறந்த அத்தன். அத்தகையோனை நாடிநாளும் தொழுதேன். அதனால் என்செயல் மாண்டு அவன் வழிநின்று அடிமையாயினேன். நெல்லிக்கனியின் தன்மையை வருமாறு நினைவுகூர்க: 'நெல்லிக் கனிவிடாய் நீக்குமுடன் நீர்பருகச், சொல்லொணா இன்சுவைத்தாம் சொல்.' இதுபோல் திருவடிப்பேற்றால் பிறவிப்பிணி உடன் நீங்குதலும், பேரின்பநுகர்வு என்றும் ஓங்குதலும் உண்டென்பது தெளிக. 'மெய்த்தவம்' எனினும் 'இறப்பில் தவம்' எனினும் ஒன்றே. தவப்பயன் என்றும் பொன்றாதிருப்பது மெய்த்தவம். (அ. சி.) மெய்த்தவத்தான் - சிவன். அமைந்து ஒழிந்தேன் - செயல் மாளப்பெற்றேன். (10)
1. செய்ய. அப்பர், 5. 72 - 2. " பசித்துண்டு. சிவஞானபோதம், 8. 1 - 2.
|