666. தானே படைத்திட வல்லவ னாயிடும் தானே யளித்திட வல்லவ னாயிடும் தானேசங் காரத் தலைவனு மாயிடும் தானே யிவனெனுந் தன்மைய னாமே. (ப. இ.) படைத்தல் காத்தல் துடைத்தல்களாகிய உடம்பின்கண் செய்யப்படும் முத்தொழில்களையும் எளிதாக இயற்றும் வலிமையுடையவன் ஆவன். முழுமுதற் சிவனே இவன் என மொழியவும்படுவன். (47) 667. தண்மைய தாகத் தழைத்த கலையினுள் பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை வண்மைய தாக மறித்திடில் ஓராண்டின் மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே. (ப. இ.) குளிர்ச்சியாக விளங்கும் திங்கள் கலையினுள், மாறுபட்ட பல தன்மைகள் பொருந்திய பரந்து திரியும் ஐம்பூதங்களைத் திருவருள் துணையால் வளப்பம்பொருந்திய நன்னெறிக்கு வாயிலாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் கொண்டால் ஓராண்டுப்பயிற்சியில் எப்பொருட்கும் சார்பாம் இயற்கை மென்மைத்தன்மை வாய்க்கும்: வாய்ந்த பெரும் பேற்றால், மெய்ப்பொருளாம் முழுமுதற் சிவத்தைக் கண்டு வழிபடுதல் கூடும். (48) வசித்துவம் (கவர்ச்சி) 668. மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின் நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங் கைப்பொரு ளாகக் கலந்து உயிர்க்கெலாந் தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே. (ப. இ.) திருவருள் துணையால் உண்மைப்பொருளாக விளைந்தது எதுவென்றால், அருட்பொலிவாம் கவர்ச்சி என்று சொல்லக்கூடிய வசித்துவமாம். அதுவே தூய நற்பொருள். கைப்பொரு...னாகுமே - எல்லாவுயிர்க்கும் இயைந்தியக்கும் பொருளாகக் கலந்த முழுமுதற் சிவமாம் தன்மையனாகிய பெரும்பொருளே தற்பொருள். தற்பொருள் - தானே முழுமுதல்; சிவபெருமான். (அ. சி.) கைப்....எல்லாம் - காணப்படும் உயிர் வருக்கங்களுக்கு எல்லாம். (49) 669. தன்மைய தாகத் தழைத்த பகலவன் மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின் பொன்மைய தாகப் புலன்களும் போயிட நன்மைய தாகிய நற்கொடி காணுமே.
|