(அ. சி.) முத்தன் - முத்தியைப் பயப்பவன். கற்று அற்று நின்றார் - கலைகள் அனைத்தும் கற்று, சந்தேக விபரீதம் அற்று உணர்ந்து அடங்கி நின்றார். செற்று - சினம். (21) 1012 .சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமிக் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றுங் கலந்தவர் தாமே. (ப. இ.) நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் என்று சொல்லப்படும் ஐங்கலையும் சேர்ந்தது. ஆகும் ஓமகுண்டம், ஐங்கலை என்பது ஐவகைத் திருவருளாற்றல்கள். நிறைந்த திசை விளக்கமும் அங்கே காணப்பெறும். பரந்த நிலமுதலிய ஐம்பூதவுண்மையும் அங்கே புலனாகும். இவற்றைத் திருநோக்கம் செய்வது செஞ்சுடர்ச் சிவபெருமான். உலகவுண்மையுணர்ந்து பற்றற்றவர் அச் சிவபெருமான் திருவடியிற் கலந்து இன்புறுவர். (அ. சி.) பாய்ந்த - பரந்த. காய்ந்தவர் - உலகத்தை வெறுத்தவர். (22) 1013 .மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும் உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள் பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே. (ப. இ.) புலனாம் படி வரையறை செய்யப்பட்ட கடலாற் சூழப்பட்ட உலகங்கள் ஏழு. அவ் ஏழையும் உய்யுமாறு வரையறை செய்த ஒப்பில்லா முழுமுதலைச் சேருங்கள். வரையறை செய்யப்பெற்ற அறிவினாலுணர்வார் தேவரே யாவர். அவர்கள் நிலையில்லாததும் எல்லைப்படுத்தப்பட்டது. இல்லாததுமாகிய மெய்பொருளாம் சிவத்துடன் கலந்திருப்பர். (அ. சி.) பொய்கண்டம் இல்லா - அசத்தும் கண்டமும் இல்லா, அதாவது சத்தாயும் எங்கும் வியாபித்தும் உள்ள. (23) 1014 .கலந்திரு பாதம் இருகர மாகும் மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு மலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் நெற்றி உணர்ந்திரு குஞ்சியங் குத்தம் னார்க்கே. (ப. இ.) ஓமகுண்டத்து விளங்கும் இறைவன் திருவுருவினை வருமாறு கருதுதல் வேண்டும். செம்மை நிறம் பொருந்திய திருமுகமும், குழிந்த குங்கும நிறமாகிய மூக்கும், நெற்றிக் கண்ணோடு கூடிய முக்கண்ணும், நீண்ட கரிய தலைமயிரும், இரண்டு திருக்கைகளும், இரண்டு திருவடிகளும் உடைய ஒரு பெரும் பொருளாகக் கருதுக. மகாரம் - மகரம்: குங்கும நிறம். (அ. சி.) இம் மந்திரம் நவகுண்டநாதன் உருவத்தியானம் கூறுகின்றது. (24)
|