1083
 

குறைவாகும். அக்குகுறயினைச் சிவபெருமான் இயற்கையாயுள்ள தன் அளவில் பேரொளியினின்றும் ஒளிகொடுத்தருளிப்போக்கினன் போக்கி வேறறக்கலந்துநின்றனன்.

(அ. சி.) விரிகதிர் - சூரியன். சோதி அருள - சிவன் கொடுத்தலால். விளங்கு ஒளி பெற்றதே பேரொளி - இல்லை என்னாது கொடுக்கும் புகழ் (ஒளி) பெற்ற தெய்வமாகிய சிவம் தம் இயற்கைப் பேரொளியினின்றும். வேறு களங்கொளி - வேறாகிய களங்கமுள்ள சூரிய - சந்திர - அக்கினி ஒளிகளை உண்டாக்கி. கலந்து நின்றான் - அவர்களுக்கு ஒளியுண்டாமாறு சேர்ந்து நின்றான்.

(3)

2635. இளங்கொளி யீசன் பிறப்பொன்று 1மில்லி
துளங்கொளி ஞாயிறுந் திங்களுங் கண்கள்
வளங்கொளி யங்கியு மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே.

(ப. இ.) இலங்கொளி எனற் பாலது இளங்கொளி என நின்றது. இஃது அலமரல் அளமரல் என நிற்பது போன்றாகும். திகழும் இயற்கை யொளியினையுடைய சிவபெருமான் என்றும் பிறப்பொன்றுமிலாப் பெரும்பெற்றியன். உலகினுக்கு ஒளிதரும் ஞாயிறும் திங்களும் சிவபெருமானின் முறையே வலக்கண்ணும் இடக்கண்ணுமாகிய இருகண்களாகச் சொல்லப்படும். ஈண்டுக் கண்ணென்பது கருத்து. அஃதாவது சிவபெருமானின் திருவுள்ளத்தால் இவை ஒளிர்கின்றன என்பதாம். மேலும் அச் சிவபெருமான் உலகமே உருவாகக்கொண்டுள்ளவன். அத் திருமேனிக்கண் கண்போன்று உருவகிக்கத்தக்கன ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றுமேயாம். தீ, சிவபெருமானின் நெற்றிக்கண்ணாகும். இம்மூன்று திருக்கண்களுடனும் அறிவுப் பெருவெளியே திருமேனியாகக்கொண்டு திகழ்ந்தருளுபவன் சிவபெருமான். மெய் - உடம்பு. காயம் - வெளி.

(4)

2636. மேலொளி கீழதன் மேவிய மாருதம்
2பாலொளி யங்கி பரந்தொளி யாகாசம்
நீரொளி செய்து நெடுவிசும் பொன்றிலும்
மேலொளி யைந்தும் ஒருங்கொளி யாமே.

(ப. இ.) ஐம்பூதங்களுள் மேலாகநிற்கும் ஒளி விசும்பாகும். அவ் விசும்பினைத் தடவிவரும் ஒளிப்பொருள் காற்று. அக் காற்றின்பாலாய் விளங்குமொளி தீ. நீருக்கு இடங்கொடுத்து எங்கணும் பரந்திருப்பது நிலம். அந்நிலத்தின்மேல் விளங்குவது நீர். மேலோதிய பூதங்கள் ஐந்தும் ஓராற்றான் விளங்குவனவற்றை ஒளியென்றருளினர். இவ் விளக்கம் முழுவதும் சிவபெருமான் திருவருளாலேயே யாகும்.

(அ. சி.) மேலொளி - ஆகாயம். மாருதம் - காற்று. பார் ஒளி - மண். அங்கி - தீ. நீர் - நீர். மேலொளி ஐந்தும். மேன்மை பொருந்திய அல்லது மேலே கூறிய ஐந்து ஒளிகளும்.

(5)


1. சீர்த்தானைச். அப்பர், 6. 54. 2.

(பாடம்) 2. பாரொளி.