என்னும் நன்னெறி நான்மையின் பேறுகள் நான்கு. அவை உருவ நிலையிலும் அருவ நிலையினுமாக எட்டாகும். ஆண்டான் மெய்யின்கண் உறையும் அறிவு முதல்வர் எண்மர் நிலையும் பதமெட்டாகும்; எண்பெரும் சித்திகளும் சித்தி எட்டாகும். ஐம்பெரும் பூதங்கள், ஞாயிறு, திங்கள், ஆருயிர் என்னும் எட்டும் சிவனிலை எட்டாகும். இவ்வெட்டின் உண்மை காண்டல் சுத்தியாகிய தூய்மை எட்டாகும். இவையனைத்தினும் முழுமுதற் சிவபெருமான் முடிவு பேறில்லாத தொன்மைத் திருநடம் நடிப்பன். சிவபெருமான் திருநடமே சிறப்பாக உலகுயிர்களை ஆடவும் பாடவும் கூடவும் செய்கின்றது. இவையே திருநடக் குறிப்பாகும். (அ. சி.) சத்திகள் ஐந்து - பரை, ஆதி, இச்சை, கிரிபை, ஞானம். சிவபேதந்தான் ஐந்து - சிவத்தின் உருவ பேதங்களாகிய அயன், அரி, அரன், ஈசன். அருவுருவ பேதமாகிய சதாசிவமும். முத்திகளெட்டும் - பதமுத்திகள் எட்டும். கணபதி - அயன், அரி, முருகன், உருத்திரன், இந்திரன், சண்டி, ஈசன் கயிலை ஆக எட்டு. பதம் எட்டும் - உருவ அருவ பேதமாயுள்ள சாலோகாதி எட்டும். சித்திகள் எட்டும் - அணிமா முதலிய சித்திகள் எட்டும். சிவபதம் தானெட்டும் - சைவ சம்பந்தமான பதங்கள் எட்டும். சுத்திகள் எட்டும் - (1) பார்த்தல் (நிரீட்சணம்) (2) தெளித்தல் (புரோக்கணம்) (3) தட்டுதல் (தாடனம்) (4) மூடுதல் (அப்யுக்கணம்) (5) முத்தட்டு (தாளத்திரயம்) (6) திசைக்கட்டு (திக்குபந்தனம்) (7) வளைத்தல் (அவகுண்டனம்) (8) அமிர்தம் சொரிதல் (தேனுமுத்திரை). (6) 2692. மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழுந் தேகங்கள் ஏழுஞ் சிவபாற் கரன்ஏழுந் தாகங்கள் ஏழுடன் சாந்திகள் தாம்ஏழும் ஆகின்ற நந்தி யடிக்கீழ் அடங்குமே. (ப. இ.) எழுவகை மேகங்களும், எழுவகைத் தீவுகளும், எழுவகை யுடல்களும், சிவ ஞாயிறு ஏழும், ஏழுநாவினையுடைய தீயும், சாந்தியாகிய எழுவகை அடக்கங்களும் சிவபெருமான் திருவடிக்கீழ் அடங்கும். எழுவகை மேகங்கள் ஆவன: 'சம்வர்த்த மாவர்த்தம் புட்கலாவர்த்தஞ், சங்காரித்தந் துரோணம் காளமுகி, நீலவருணமேழ் மேகப் பெயரே' (பிங்கலம் - 71.) என்பனவாம். எழுவகைத் தீவுகளான: நாவலந் தீவு, சாகத்தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சன்மலித்தீவு, கோமேதகத் தீவு, புட்கரத் தீவு என்பனவாம். ஏழுவகை யுடல்கள்: நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நாற்காலின, நிலைத்திணையன, மக்கள், தேவர் என்பனவாம். சிவஞாயிறு ஏழு. செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு, மனம், இறுப்பு (புத்தி) என்னும் அறிதற்கருவி ஏழுமாகும். சிவபாற்சுரன் சிவசூரியன். எழுவகையடக்கம் மேற்கூறிய பொறிகள் ஐந்து, மனம், இறுப்பு ஆகிய ஏழும் அடங்குதல். இறுப்பு: புத்தி. (அ. சி.) தேகங்கள் ஏழு - எழுவகைத் தோற்றங்கள். சிவபாற்கரன் ஏழும் - சிவசூரியன் என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும் புத்தியம் ஆக ஏழு. தாகங்கள் ஏழு - எழுநா. அக்கினி சாந்திகள் ஏழு - ஐம் பொறிகளையும் மனம், புத்தி இவைகளையும் அடக்கி இருக்கும் நிலை. (7)
|