1115
 

2700. காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேயாடி
நீடிய நீர்தீக்கால் நீள்வா னிடையாடி
நாளுற அம்பலத் தேயாடும் 1நாதனே.

(ப. இ.) சிவபெருமான் காளியை அடக்குவதன்பொருட்டுக் காளியுடன் ஆடியருளுகின்றனர். பொன்மலையாகிய மேருநன்மலைக்கண் ஆடியருளுகின்றனர். பேய்க் கூட்டங்களுடன் ஆடியருளுகின்றனர். நிலவுலகத்தே ஆடியருளுகின்றனர். ஐம்பெரும் பூதங்களினிடமாக நின்று ஆடியருளுகின்றனர். எல்லையில் காலமாகத் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் சிறப்புற நின்று ஆடியருளுகின்றனர். ஆடுதல்: உலகுயிர் தொழிற்படும் பொருட்டுத் தலைவனாகிய சிவபெருமான் தொழிற்படுதல். அவன் தொழிற்படுதலாவது திருவுள்ளங்கொள்ளுதல். திருவுள்ளங் கொள்ளுதலென்பது இன்னவாறு ஆகுக எனச் சிவன் அறிவிற் கணித்தல்.

(8)

2701. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.

(ப. இ.) அண்டத்தின் நடுவாகப் பொன்மலையாகிய மேரு விளங்குகின்றது. இதுபோல் பிண்டமாகிய உடம்பகத்து நடுநாடி விளங்குகின்றது. நடுநாடியினைச் சுழுமுனை என்ப. மேருவினை நிலத்தின் நடுக்கோடு என்ப. நடுக்கோட்டின் வடபாலும் தென்பாலுமுள்ள கோடுகளை வழிக்கோடுகள் என்ப. அதுபோல் உடம்பகத்து இடப்பால் நாடி வலப்பால் நாடி என்பன உள்ளன. இடப்பால் நாடி இடைகலை எனவும் வலப்பால் நாடி பிங்கலை எனவும் கூறப்படும். சொல்லப்படும் இவ் வான வெளியில் நடுக்கோட்டின் நிலையினை இலங்கை எனக் கூறுப. இவ் விலங்கைக் கோட்டுடன் தில்லைத் திருச்சிற்றம்பலக்கோடும் பொருந்தியிருக்கின்றது. தில்லைக்கும் பொதியின் மலைக்கும் ஊடாகச் செல்லும் நாடி நடுநாடியாகும். இவையே தென்னாட்டுச் சிவபூமியாகும். இம் முறை சிறப்பு முறையாகும். பொதுமுறையான் நோக்கும் வழி இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவின்கண் உள்ளது தில்லை. இவ் விரண்டற்கும் இடைப்பட்டது சிவபூமியாகும். திருத்தொண்டர் புராணத்துள் 'மாதவஞ் செய் தென்றிசையின்' மாண்புரைக்குங்கால் பெரும்பற்றப் புலியூர், திருஆரூர், திருக்காஞ்சி, திருவையாறு, திருத்தோணிபுரம் முதலிய சிவ வழிபாட்டிடங்கள் பல என அருளியதூஉங் காண்க.

(அ. சி.) மேரு நடுநாடி - அண்டத்துள் நடுரேகையும் (Equator), பிண்டத்துள் சுழுமுனையும். அண்டத்துள் இதன் வட அயன வரை


1. வென்றிமிகு. சம்பந்தர். 2. 32 - 5.

" பைதற். அப்பர், 4. 100 - 2.

" பூத்தா. " 5. 22 - 2.

" எட்டி. 11. காரைக்காலம்மை, மூத்த. 1.